
ஆட்டோவில் அழைத்து சென்று மூதாட்டியிடம் 4 பவுன் நகையை திருடி சென்ற 3 பெண்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவை புலியகுளம் கருப்பராயன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி பகவதியம்மாள்(78). இவர் சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு செல்வதற்காக சுங்கம் பஸ் டிப்போ அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பெண்கள், பகவதியம்மாளிடம் பேச்சு கொடுத்தனர். பின்னர் நாங்களும் சிங்காநல்லூர் செல்லவேண்டும், எனவே ஆட்டோவை வரவழைத்து ஆட்டோவில் செல்லலாம் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த 3 பெண்களும், ஆட்டோவில் பகவதியம்மாளை அழைத்து சென்றனர்.
பின்னர் அந்த 3 பெண்களும் ஜிவி ரெசிடென்சி அருகே ஆட்டோவில் இருந்து இறங்கி சென்று விட்டனர். சிறிது தூரம் சென்றதும், பகவதியம்மாள் சந்தேகத்தின் பேரில் தனது மணிபர்சை திறந்து பார்த்தார். அதில் வைத்திருந்த 4 பவுன் நகையை காணவில்லை. மூதாட்டியை ஆட்டோவில் அழைத்து சென்ற பெண்கள் நைசாக நகையை திருடி சென்றுவிட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.