
தென்காசி மாவட்டத்தில் வாட்ஸ் அப்பில் வந்த லிங்கை க்ளிக் செய்தவர் இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட கோகுலம் காலனியைச் சேர்ந்தவர் செல்வ ரெங்கராஜ்(39). தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக உள்ளார். இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு அவரோடு தொடர்பு இல்லாத ஒரு எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஒரு லிங்க் இருந்தது. அதில் என்ன இருக்கிறது எனத் தெரிந்துகொள்ள லிங்கை செல்வ ரெங்கராஜ் க்ளிக் செய்தார். அடுத்த சில நொடிகளில் அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் நீங்கள் லிங்கைக் க்ளிக் செய்து, எங்கள் ஆப்பை பயன்படுத்தியதற்கு பரிசு விழுந்துள்ளது.
அந்த பரிசைப்பெற உங்களுக்கு வந்திருக்கும் பாஸ்வேர்டை சொல்லுங்கள் எனப் பேசினார். அதை அப்படியே நம்பிய செல்வ ரெங்கராஜ் பாஸ்வேர்டை சொன்னார். உடனே அடுத்த சில நொடிகளில் அவரது வங்கிக்கணக்கில் இருந்து 50 ஆயிரம் எடுக்கப்பட்டுவிட்டதாக தகவல் வந்தது. அவர் அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நிலையில் மீண்டும் தொடர்ந்து 50 ஆயிரம் ரூபாயாக, நான்குமுறை பணம் எடுத்ததாக எஸ்.எம்.எஸ் வந்து விழுந்தது. அவரது கணக்கில் இருந்து அப்படி இரண்டரை லட்சம் ரூபாயை எடுத்தனர்.
செல்வரெங்கராஜ் எண்ணிற்கு லிங்கை அனுப்பி அவரது செல்போனை இயக்கி, வங்கியில் இருந்து மர்ம நபர்கள் பணத்தை எடுத்துள்ளனர். இதுகுறித்து செல்வ ரெங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் தென்காசி சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போனுக்கு தெரியாத எண்ணில் இருந்து வரும் லிங்க்களை க்ளிக் செய்ய வேண்டாம் எனவும் சைபர் க்ரைம் போலீஸார் தொடர்ந்து அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.