திருமணம் செய்வதாக ஏமாற்றினார்… ஐஜி அன்பு பெயரைச் சொல்லி மிரட்டுகிறார்: காவலர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்

சரிதா.
சரிதா.

திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி பணம், நகை, இருசக்கர வாகனம், பெற்றுக்கொண்டு மோசடி செய்த காவலர் மீது இளம்பெண் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

சென்னையை அடுத்த மணலி பகுதியைச் சேர்ந்தவர் சரிதா. இவர் தொண்டு நிறுவனத்தில் வேலை பாரத்து வருகிறார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று அவர் புகார் மனு அளித்தார்.

காவலர் செல்லதுரை
காவலர் செல்லதுரை

இதன் பின் செய்தியாளர்களிடம் சரிதா கூறுகையில், “கடந்த 2020-ம் ஆண்டு நண்பர் மூலமாக காவலர் செல்லதுரை எனக்கு அறிமுகமானார். நாங்கள் தொடர்ந்து பேசி வந்த நிலையில், தான் விவாகரத்தானவர் என்றும், என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் செல்லதுரை கூறினார். அத்துடன் முதல் மனைவியுடன் விவாகரத்தாகி விட்டதாக கூறினார்.

இதை நம்பி அவர் கேட்ட போதெல்லாம் அவருக்கு பணம், நகை, இருசக்கர வாகனம் என வாங்கிக் கொடுத்தேன். அதுமட்டுமல்லாமல் தனக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் என்னைத் திருமணம் செய்து கொள்வதாக கைப்பட கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார்” என்று கூறினார் .

சரிதாவுடன் காவலர் செல்லதுரை.
சரிதாவுடன் காவலர் செல்லதுரை.

மேலும் அவர் கூறுகையில், " நாளடைவில் பல்வேறு காரணங்களைக் கூறி திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் சந்தேகமடைந்து செல்லதுரை குறித்து விசாரித்த போது, அவர் முதல் மனைவியுடன் விவாகரத்து பெறவில்லை என்ற உண்மை தெரியவந்தது. அத்துடன் அவருக்கு பல பெண்களுடன் தகாத உறவு இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து செல்லதுரையிடம் கேட்டபோது, தான் ஐஜி அன்பு ஐபிஎஸ்சிடம் வேலை பார்ப்பதாகவும், ஐஜி அன்பு அவரது மனைவி சேர்ந்து தி.நகரில் உள்ள பிரபல நகை கடையில் 1 கோடி ரூபாயில் வாங்கிய நகைக்கு நான் தான் பினாமி என்றும் கூறினார். மேலும் அன்பு, அவரது மனைவி சட்டத்துக்குப் புறம்பாக வாங்கிய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்த விவரம் தனக்கு மட்டும் தான் தெரியும். எனவே என் மீது புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார். மீறி நடவடிக்கை எடுத்தால் அவர்களின் குட்டுக்கள் அம்பலமாகும் என மிரட்டுகிறார்.

அத்துடன் தனது இரு அண்ணன்களும் காவல்துறையில் பணியாற்றுவதால் எதுவும் செய்ய முடியாது என்று கூறுகிறார். இதுகுறித்து செல்லதுரையின் முதல் மனைவியை சந்தித்து கூறியபோது, அவரும் கடுமையான சொற்களால் வசைபாடி விரட்டியனுப்பினார். இதன் தொடர்ச்சியாக செல்லதுரை ஆட்களுடன் வந்து எனக்கும், என் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுத்து செல்கின்றார். அத்துடன் என்னைத் தாக்கிவிட்டு கழுத்திலிருந்த செயினையும் அறுத்துச் சென்று விட்டார். என்னைப் போல் பல பெண்களை காவலர் செல்லதுரை ஏமாற்றியுள்ளார். அவரது மோசடி செயலுக்கு அவரின் மனைவி உடந்தையாக உள்ளார். எனவே, என்னை மோசடி செய்த செல்லதுரை மற்றும் அவரது மனைவி வேணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in