கல்விக்கடன் மறுத்த ஹெச்டிஎஃப்சி வங்கி: அதிரடி காட்டிய மதுரை எம்பி வெங்கடேசன்

கல்விக்கடன் மறுத்த ஹெச்டிஎஃப்சி வங்கி: அதிரடி காட்டிய மதுரை எம்பி வெங்கடேசன்

மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க மறுத்த ஹெச்டிஎஃப்சி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட 50 கோடியை தேசிய வங்கிக்கு மாற்றி மதுரை எம்பி சு.வெங்கடேசன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்வியை பாதியிலேயே கைவிடும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு, அந்த மாணவர்களுக்காக கல்வி கடன் வழங்க ஏற்பாடு செய்து அவர்களின் உயர்கல்வியை தொடர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரத்தில் ஒரு சில தனியார் வங்கிகள் மாணவர்களுக்கு கல்விக் கடன் கொடுப்பதில்லை. இதனால் ஏழை, நடுத்தர மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, தங்களது உயர் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டு சிறு வயதிலேயே வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டு விடுகிறது. இதனால் தனது கல்வியை இழக்கும் நிலையும் அவர்களுக்கு ஏற்படுகிறது.

இந்த நிலையில் மாணவர்கள் உயர் கல்வியை தொடர மதுரை எம்பி சு.வெங்கடேசன் கல்விக்கடன் மேளாவை தனது தொகுதியில் நடத்தி வருகிறார். அதன்படி அண்மையில் கல்விக் கடன் மேளா மதுரையில் நடைபெற்றது. இதில் தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி கல்விக்கடன் மேளாவில் பங்கேற்க மறுத்துவிட்டது. இதையடுத்து ஹெச்டிஎஃப்சி வங்கியில் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக 50 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கல்வி கடன் மேளாவில் பங்கெடுக்க மறுத்த இந்த வங்கியில் இருந்து டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை தேசிய வங்கிகளுக்கு மாற்றுவது குறித்து வெங்கடேசன் எம்பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட 50 கோடி ரூபாயை தேசிய வங்கிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. மதுரை எம்பி சு.வெங்கடேசனின் இந்த அதிரடி நடவடிக்கை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இது குறித்து சு.வெங்கடேசன் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில், "எங்கள் மாணவர்களுக்கு கல்விக்கடன் தரமறுக்கும் வங்கிகளில் அரசின் பணம் ஏன் டெபாஸிட் செய்யப்பட வேண்டும்? மதுரை - கல்விக்கடன் மேளாவில் பங்கெடுக்காத தனியார் வங்கியில் அரசு செய்துள்ள டெபாசிட் தொகையை திரும்பப்பெறுவோம். எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்" என்று காட்டமாக கூறியுள்ளார்.

இதனை வரவேற்றுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன், “எங்கள் பிள்ளைகளுக்கு கல்விக்கடன் கொடுக்க மறுக்கும் தனியார் வங்கிகளில் மக்களின் வரிப்பணம் எதற்காக இருக்கவேண்டும்? என்ற கேள்வியுடன் ஹெச்டிஎஃப்சி வங்கியில் இருந்த 50 கோடி வைப்புதொகையை தேசிய வங்கிக்கு மாற்ற உத்தரவிட்ட மதுரை எம்பி சு.வெங்கடேசனுக்கு வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in