சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசுக்கு  ஐகோர்ட்  எச்சரிக்கை

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கான நிலம் கையகப்படுத்துதலில்  போலி நில ஆவணங்களைக் கொடுத்து  இழப்பீட்டுத் தொகை பெற்றவர்களிடமிருந்து அதனைத்  திரும்ப பெறாவிட்டால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றபோது, ஒரு சிலர் போலி ஆவணங்களை காண்பித்து அரசிடம் 20 கோடி ரூபாய் வரை இழப்பீடு பெற்றுள்ளதாக கூறி ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், நிலத்தின் உண்மையான உரிமையாளருக்குத்தான் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதை  நிறைவேற்றவில்லை எனக் கூறி திரும்பவும்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா,  வட்டாட்சியர் மீனா ஆகியோர் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இன்று ஆஜராகினர். அப்போதைய மாவட்ட ஆட்சியர் பொன்னையா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், இழப்பீடு வழங்குவதற்கும் மாவட்ட ஆட்சியருக்கும் தொடர்பில்லை என்றும், தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின் கீழ் நில கையகப்படுத்தும் மாவட்ட வருவாய் அதிகாரிக்குத்தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளதாக தெரிவித்தார்.

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜரானார். சிபிசிஐடி காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், இதுவரை நான்கு கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அப்போது நீதிபதி தண்டபாணி, " போலி ஆவணங்களைக் காண்பித்து இழப்பீடு பெற்றவர்கள் தொடர்பாக சிபிசிஐடி நடத்திவரும் விசாரணையில் திருப்தி இல்லை. இழப்பீடாக் கொடுக்கப்பட்ட தொகை பொதுமக்களுடையது.  அந்த பணத்தை முறைகேடாக பெற்றவர்களிடம் இருந்து திரும்ப பெற வேண்டும். பொதுமக்களுடைய பணம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்த நீதிமன்றத்தின் நோக்கம். இதில் கருணை காட்ட முடியாது.  தவறாக கொடுக்கப்பட்ட இழப்பீட்டு தொகையை திரும்ப பெறாவிட்டால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்" என்றும் எச்சரித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை டிச.2-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in