ஆகமம் கண்டறிவது தொடர்பான 50 கேள்விகள்: அறநிலையத் துறையின் சுற்றறிக்கைக்கு இடைக்காலத்தடை

ஆகமம் கண்டறிவது தொடர்பான 50 கேள்விகள்: அறநிலையத் துறையின் சுற்றறிக்கைக்கு இடைக்காலத்தடை

கோயில்களின் ஆகமங்களை கண்டறிவது தொடர்பாக 50 கேள்விகளுடன் அனுப்பப்பட்ட அறநிலையத்துறையின் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் விதிகளை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகம விதிப்படி அர்ச்சர்களை நியமிக்க வேண்டும் என்பதால், எந்தெந்த கோயில்கள் எந்தெந்த ஆகமங்களை பின்பற்றுகின்றன என்பதை அடையாளம் காண  உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் ஐந்து பேர் குழுவை நியமித்து உத்தரவிட்டது. இக்குழுவில், குழு தலைவர் ஒப்புதலுடன் இரு உறுப்பினர்களை அரசு  நியமிக்கவும் அறிவுறுத்தியிருந்தது. 

இந்நிலையில், கோயில்களின் ஆகமங்களை அடையாளம் காண, அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் சத்தியவேல் முருகன் தயாரித்த 50 கேள்விகளுக்கு விடையளிக்கும்படி, அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத்துறை ஆணையர் சார்பில் அனுப்பப்பட்ட  நவ.4-ம் தேதியிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், கோயில்களின் ஆகமத்தை கண்டறிய உயர் நீதிமன்றம் நியமித்த குழுவின் அதிகாரத்தை பறித்துக் கொள்ளும் வகையில், சம்பந்தமில்லாத கேள்விகளுடன் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது, உயர் நீதிமன்ற உத்தரவின்படி இரு பிரதிநிதிகளை நியமிக்காத அரசு, அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு தலைவருக்கு அதிக அதிகாரம் வழங்கியுள்ளது.  இது நீதிமன்ற அவமதிப்பு செயல் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகமங்கள் பற்றி ஏதும் தெரியாத சத்தியவேல் முருகன், நடைமுறையில் இல்லாத தமிழ் ஆகமம் பற்றி தவறான பரப்புரை மேற்கொண்டு வருவதாகவும், ஆகமங்களை அறியாத அவர் தயாரித்த கேள்விகளுடன் கூடிய சுற்றறிக்கையை ரத்து செய்வதுடன்,  அவரை உயர் நீதிமன்றம் நியமித்த குழுவில் உறுப்பினராக நியமிக்க தடை விதிக்க வேண்டும் எனவும்  அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று  விசாரணைக்கு வந்தது.  ' 'உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படாத நிலையில், குறிப்பிட்ட நபரை நியமிக்கக் கூடாது என முன்கூட்டியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும்,  கடந்த நவ. 4-ம் தேதி  சுற்றறிக்கை வேறு பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டதாகவும் தமிழக அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குறிப்பிட்ட அந்த சுற்றறிக்கை ஆகம விவரங்களை கோரும் வகையில் உள்ளதாக கூறி, ஆகமங்களைக் கண்டறிவது தொடர்பாக 50 கேள்விகள் எழுப்பி அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in