14 நாட்களில் அபராதம் செலுத்தவில்லையா நீங்கள்?; உங்கள் வாகனம் ஏலம் விடப்படும்: போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை

14 நாட்களில் அபராதம் செலுத்தவில்லையா நீங்கள்?; உங்கள் வாகனம் ஏலம் விடப்படும்: போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை

"14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தவில்லையென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும்" என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகச் சாலை விபத்தில் முதலிடம் பிடித்து வருகிறது. 2019-ம் ஆண்டில் மட்டும் 57,228 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தைத் தொடர்ந்து மத்திய பிரதேசம் இரண்டாம் இடத்தில் 51,641 சாலை விபத்து பதிவுடன் உள்ளது. மூன்றாம் இடத்தில் கர்நாடகா 40,644 எனும் எண்ணிக்கையில் உள்ளது. என்சிபிஆர் (NCBR) அறிக்கைப்படி தமிழகத்தில் 57,228 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இவற்றின் மூலம் 10,525 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

பெரும்பாலான விபத்துகளுக்கு சாலை விதிகளை மீறுவதும், இருசக்கர வாகனத்தில் செல்வோர் மொபைலில் பேசிக்கொண்டு செல்வதும், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணியாமல் செல்வதும், குடி போதையில் வாகனங்கள் ஓட்டுவதும் முக்கிய பங்காக உள்ளது. இவை தவிர்த்து மோசமான சாலைகளாலும், இரவு நேரத்தில் விளக்குகள் சரிவர எரியாததாலும், நெடுஞ்சாலைகளில் உள்ள அபாய பகுதிகளை கண்டறிந்து சரி செய்யாமல் இருப்பதாலும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துகள் நிகழ்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அபராத தொகையை பல மடங்கு அதிகரித்து மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை 500 முதல் 1 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது.

மோட்டார் சைக்கிளில் 'ஹெல்மெட்' அணியாமல் சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகை 10 மடங்கு அதிகரித்து ரூ.1,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதே போன்று காரில் 'சீட்' பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.1,000, செல்போனில் பேசியபடி வாகனத்தை ஓட்டி சென்றால் ரூ.1,000, இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு ரூ.2,000, நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தினால் ரூ.500 என்று அபராத தொகை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு மட்டும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வரும் வேளையில் பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களுக்கும் அபராதம், ஆம்புலன்சுகளுக்கு வழி விடாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் என புதிய நடைமுறையும் கொண்டு வரப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளை கதிகலங்க வைத்துள்ள இந்த புதிய அபராத நடைமுறை சென்னையில் அக்டோபர் 28-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.

இந்த நிலையில், குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீஸாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, "14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தவில்லையென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும்" என்று கூறப்பட்டுள்ளது. ஜனவரி முதல் ஜூலை வரை குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாத 50 பேரின் கார்கள் ஏலம் விடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in