டெல்லியின் காற்று மாசுபாட்டுக்கு ஹரியாணாதான் காரணம் - ஆம் ஆத்மி அரசு குற்றச்சாட்டு!

டெல்லியின் காற்று மாசுபாட்டுக்கு ஹரியாணாதான் காரணம் - ஆம் ஆத்மி அரசு குற்றச்சாட்டு!

டெல்லியின் தீவிரமான காற்று மாசு சூழலுக்கு அதன் அருகில் உள்ள ஹரியாணா மாநிலமே காரணம் என ஆளும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா காக்கர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது: "பஞ்சாப்பில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவது தேசியத் தலைநகரில் இருந்து 500 கி.மீ., நடக்கிறது. ஆனால் ஹரியாணா மாநிலம் டெல்லியில் இருந்து 100 கி.மீ மட்டுமே தள்ளியிருக்கிறது. ஹரியாணாவே டெல்லி காற்று மாசு அதிகரிக்கக் காரணம். இதனால், கடந்த 2014ம் ஆண்டில் இருந்து ஹரியாணாவின் மனோகர் லால் கட்டார் அரசு எடுத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

கடந்த 2022- 23 ஆண்டில் எடுத்த பொருளாதார கணக்கெடுப்பில், கடந்த எட்டு ஆண்டுகளில் டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. அதேபோல் பஞ்சாப்பில் கழிவுகள் எரிப்பது 50- 67 சதவீதம் குறைந்திருப்பதாக காற்று தர மேலாண்மை ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேசிய தலைநகரில் காற்றின் ஒட்டு மொத்த தரக்குறியீடு திங்கள் கிழமையும் மோசமானதாகவே தொடரும் நிலையில் மதியம் உயர்மட்ட கூட்டத்துக்கு டெல்லி முதல்வர் அர்விந்த கேஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே அடுத்த சில நாட்களுக்கு டெல்லியில் காற்றின் தரம் மோசமானதாகவே இருக்கும் என்று இடபிள்யூஎஸ் (Early Warning System) தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் காற்று மாசை எதிர்கொள்ள காற்று தர மேலாண்மை ஆணையம் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் கிராப்-4 (GRAP-4) கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்‌ஷன் ப்ளான் (Graded Response Action Plan) -ஐ அமல்படுத்தியது. 8 விதிகள் கொண்ட இந்தத் திட்டத்தின் படி, சமையல் எரிவாயு சிலிண்டர் உள்பட மிகமிக அத்தியாவசியமான பொருட்களைக் கொண்டு வரும் வாகனங்களுக்கு மட்டுமே டெல்லிக்குள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி மிதமான லகு ரக வாகனங்கள் தொடங்கி கன ரக வாகனங்கள் வரை அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்கும் கெடுபிடி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு தொடர்ந்து 5-வது நாளாக மிகவும் மோசமாக இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக் குறையீடு 488 ஆக இருந்தது. சஃபார் (SAFAR - System of Air Quality and Weather Forecasting And Research) கணிப்பின்படி கடந்த 4-ம் தேதி மாலை 4 மணிக்கு 415 ஆக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (5-ம் தேதி) காலை 7 மணிக்கு 460 ஆகமோசமடைந்தது. இந்நிலையில் இன்று காலை இது 488 ஆக மிகவும் மோசமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in