கோவா பயணம்... நள்ளிரவில் திடீர் மாரடைப்பு: பாஜகவைச் சேர்ந்த நடிகை மரணம்

கோவா பயணம்... நள்ளிரவில் திடீர் மாரடைப்பு: பாஜகவைச் சேர்ந்த நடிகை மரணம்

ஹரியாணா மாநில பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியும், நடிகையுமான சோனாலி போகட் (42) கோவாவில் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார்.

சோனாலி போகட் தனது உதவியாளர்கள் சிலருடன் கோவா சென்றிருந்தார். நேற்று இரவு திடீரென உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறியதை அடுத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சோனாலி போகட்டின் மரணம் குறித்து செவ்வாய்க்கிழமை காலை தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், அவரின் உடலைப் பெறுவதற்காக ஹரியாணாவின் பதேஹாபாத்தில் இருந்து கோவாவுக்கு விரைந்துள்ளதாகவும் அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சோனாலி போகட் 2019-ம் ஆண்டு ஹரியாணா சட்டமன்றத் தேர்தலில் அதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். ஆனால், அப்போது காங்கிரஸ் வேட்பாளர் குல்தீப் பிஷ்னோயிடம் தோல்வியடைந்தார். பிஷ்னோய் சில வாரங்களுக்கு முன்பு தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் சேர்ந்தார். இந்த சூழலில் சோனாலி மற்றும் பிஷ்னோய் இருவரும் கடந்த வாரம் சந்தித்து ஆதம்பூர் தொகுதிக்கான வளர்ச்சிப் பணிகளை இணைந்து மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தனர். அந்த சந்திப்பின் புகைப்படத்தையும் சோனாலி போகட் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இடைத்தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக சோனாலி போகட் போட்டியிடுவார் என்ற யூகங்களும் இருந்தன.

சோனாலி போகட் இறப்பதற்கு சற்று முன்புவரை இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அவரது கடைசி இன்ஸ்டாகிராம் பதிவில் பிரபலமான ஹிந்தி பாடலுக்கு நடனமாடுவது போன்ற வீடியோ இடம்பெற்றுள்ளது.

அதே நேரத்தில் அவர் தன் ப்ரொபைல் ஃபிக்சரையும் மாற்றியுள்ளார். இந்த நிலையில் அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர் மாரடைப்பால் மரணமடைந்த சோகம் நடந்துள்ளது.

சோனாலி போகட் தனது டிக்டாக் வீடியோக்களால் புகழ் பெற்றவர். பிரபலமான இவரது வீடியோக்கள் காரணமாக சமூக வலைதளங்களில் இவரை லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்தனர். இதனைத் தொடர்ந்து 2008-ல் இவர் பாஜகவில் சேர்ந்தார். 2020-ல் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுப் புகழ்பெற்றார்.

2016-ம் ஆண்டு, சோனாலி போகட்டின் கணவர் சஞ்சய் போகட் மர்மமான முறையில் இறந்தார். இவர்களுக்கு யசோதரா போகட் என்ற மகள் உள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in