எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ஹரி நாடார்

ஹரி நாடார்
ஹரி நாடார் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ஹரி நாடார்

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் ஹரி நாடார், மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால்  இன்று  மதியம் சென்னை  எழும்பூர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். 

கடந்த 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் நாடார் சமுதாயம் சார்பாக,  சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டவர் ஹரி நாடார். அந்த தேர்தலில்  37,726 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். தமிழகத்தில் சுயேச்சை வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்றவர் இவர்தான்.

இந்த ஹரி நாடாரை  சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடு பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2021 மே மாதம் ஒரு குற்ற வழக்கில் கைது செய்து பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்தியச்சிறையில் அடைத்தனர்.  அதிலிருந்து கடந்த 22 மாதங்களாக  அங்கு அடைக்கப்பட்டுள்ளார்.

அவர்மீது அப்போதே கேரளாவைச் சேர்ந்த இஸ்மாயில் பரக்கத் என்ற தொழிலதிபர்  மோசடி புகார் ஒன்றை தமிழக  காவல் துறையினரிடம் அளித்திருந்தார். அவர் புகார் அளித்து 22 மாதங்களாகியுள்ள நிலையில் தற்போது அந்த புகாரை  சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார்  கையில் எடுத்துள்ளனர். 

ஆய்வாளர்  பிரசித் தீபா  தலைமையிலான சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார்,  பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருக்கும் ஹரி நாடாரை கடந்த   27.2.23 அன்று காலை 11.15 மணி அளவில் சிறையில் வைத்தே  கைது செய்தனர்.

இந்நிலையில் இன்று மதியம் 2.30 மணியளவில்  அவரை  சென்னை எழும்பூர்  நீதிமன்றத்தில்  நீதிபதி  முன்னிலையில்  ஆஜர் படுத்துகிறார்கள். இதனால் எழும்பூர் நீதிமன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in