100 கோடி கடன் பெற்றுத்தர 1.5 கோடி கமிஷன்: மோசடி வழக்கில் ஹரி நாடார் மீண்டும் கைது!

ஹரி நாடார்
ஹரி நாடார்100 கோடி கடனுக்கு 1.5 கோடி கமிஷன்: மோசடி வழக்கில் ஹரி நாடார் மீண்டும் கைது!

தொழிலதிபரிடம் 100 கோடி கடன் பெற்று தருவதாக கூறி 1.5 கோடி ரூபாய் கமிஷன் பெற்று மோசடி செய்த வழக்கில் ஹரி நாடாரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம், ஆலங்குலம் பகுதியை சேர்ந்தவர் ஹரி நாடார். பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஹரி நாடார் மீது தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கட்ரமணியிடம் தொழில் வளர்ச்சிக்காக 360 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி 7 கோடி ரூபாய் கமிஷன் பெற்று மோசடி செய்த வழக்கில், பெங்களூரு சிட்டி குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் ஹரி நாடாரை கைது செய்து கர்நாடகா சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மேலும் ஒரு மோசடி வழக்கில் ஹரி நாடாரை இன்று கைது செய்தனர். கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் இஸ்மாயில் சக்ராத் மற்றும் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் பஷீர் ஆகியோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர். அதில், 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக தொழிலில் நஷ்டம் அடைந்ததாகவும், அதனை சரி செய்ய வங்கியில் 100 கோடி ரூபாய் கடன் பெற முயற்சித்து கொண்டிருந்தபோது பனங்காட்டுபடை ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி 1.5 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுத்துபணத்தை மீட்டு தருமாறு கூறியிருந்தார்.

இவரது புகாரின் பேரில் விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி பிரிவு போலீஸார், ஹரி நாடார் மீது மோசடி உள்ளிட்ட இரு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஏற்கெனவே ஹரி நாடார் கைதாகி பெங்களூரு சிறையில் அடைப்பட்டு இருப்பதால் சென்னை மத்திய குற்றபிரிவு போலீஸார் பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் கைது ஆணையை முறையாக காண்பித்து அவரை கைது செய்து சென்னை அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கெனவே ஹரி நாடார், மோசடி மற்றும் நடிகை விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in