பாஜகவில் இணைகிறார் ஹர்திக் படேல்: உண்மையாகும் ஊகங்கள்!

பாஜகவில் இணைகிறார் ஹர்திக் படேல்: உண்மையாகும் ஊகங்கள்!

குஜராத் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்த ஹர்திக் படேல் அக்கட்சியிலிருந்து விலகி இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், அவர் பாஜகவில் இணைவது உறுதி எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

படேல் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரி பாடிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி எனும் பெயரில் படேல் சமூகக் குழுக்கள் இணைந்து நடத்திய போராட்டம், 2015 முதல் 2019 வரை நீடித்தது. இந்தப் போராட்டங்களை வழிநடத்தியதன் மூலம் நம்பிக்கைக்குரிய இளம் தலைவராகக் கருதப்பட்டவர் ஹர்திக் படேல். அவரது செல்வாக்கைப் பார்த்து, காங்கிரஸ் கட்சியில் சேர ராகுல் காந்தி அவருக்கு அழைப்பு விடுத்தார். 2017 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் ஹர்திக் படேல் இணைந்தார்.

அந்தத் தேர்தலில், மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களைக் கைப்பற்றியதன் பின்னணியில் ஹர்திக் படேலின் செல்வாக்கும் ஒரு காரணம் எனக் கருதப்பட்டது. எனினும், கட்சிக்குள் தனக்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனும் வருத்தம் அவருக்கு இருந்தது.

மாநில காங்கிரஸ் தலைமை தன்னை எந்தக் கூட்டத்துக்கும் அழைப்பதில்லை என்றும், எந்த முடிவு குறித்தும் தன்னிடம் ஆலோசிக்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். பாடிதார் போராட்டத்தால் குஜராத்தில் காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றதைச் சுட்டிக்காட்டிய அவர், பாஜகவை வீழ்த்துவதில் முனைப்பு காட்டாமல் தங்களுக்குள் காங்கிரஸ் கட்சியினர் மோதிக்கொண்டிருப்பதாகவும் விமர்சித்திருந்தார். ராகுல் காந்தியின் கவனத்துக்குக் கொண்டுசென்ற பின்னரும் இந்தப் பிரச்சினை நீடிப்பதாக அவர் விமர்சித்துவந்தார். கூடவே, பாஜகவைப் புகழ்ந்து பேசி காங்கிரஸ் கட்சியினரை அதிரவைத்தார். அரசியல் ரீதியாக பாஜக எடுத்த முடிவுகளைப் பாராட்டிய அவர், அக்கட்சி வலிமையுடன் இருப்பதால்தான் அப்படியான முடிவுகளைத் துணிந்து எடுக்கிறது என்று புகழ்ந்திருந்தார்.

இதையடுத்து அவர் கட்சியிலிருந்து வெளியேறுவது உறுதி எனும் ஊகங்கள் எழுந்தன. ஆனால், அவர் கடைசி வரை காங்கிரஸ் தலைமை தனக்குக் கைகொடுக்கும் என்றே கூறிவந்தார். தான் கட்சியிலேயே தொடர்வது குறித்து மத்திய தலைவர்கள் ஒரு முடிவை எட்டுவார்கள் என நம்புவதாகச் சொல்லிவந்தார்.

எனினும் கட்சியின் தேசியத் தலைமை அவரைக் கண்டுகொள்ளாததால், மே 18-ல் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், ‘நெருக்கடியான சூழல்களில் நம் தலைவர் வெளிநாட்டில் இருந்தார்’ என ராகுல் காந்தி மீது கடும் விமர்சனத்தையும் அவர் முன்வைத்திருந்தார். ஏசி அறையில் சிக்கன் சாண்ட்விச் கிடைக்கிறதா என்பதில்தான் காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் அவர் விமர்சித்தார். “சாதி அடிப்படையிலான அரசியலில்தான் குஜராத் காங்கிரஸ் அதிக கவனம் செலுத்துகிறது. இந்தக் கட்சியில் நான் எனது 3 வருடங்களை வீணடித்துவிட்டேன்” என்றும் பொருமினார்.

இதையடுத்து அவர் பாஜகவில் இணைவார் என்று பேசப்பட்டது. குஜராத்தில் காங்கிரஸுக்கு மாற்றாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயலும் ஆம் ஆத்மி கட்சியில் இணைவார் என்றும் ஊகங்கள் வெளியாகின. எனினும், அந்த ஊகங்களை அவர் மறுத்தார்.

வேறொரு கட்சியில் இணைவது எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூறிவந்த அவர், எந்த முடிவை எடுத்தாலும் மக்களின் நலனை மனதில் கொண்டே அது இருக்கும் என்றும் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக இன்று செய்தி வெளியிட்டிருக்கும் என்டிடிவி ஊடகம், வரும் வியாழன் அன்று ஹர்திக் படேல் பாஜகவில் இணைவார் எனத் தகவல்கள் வெளியாகியிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. அவர் பாஜகவில் இணைவது குறித்து கடந்த இரண்டு மாதங்களாகவே பேச்சுவார்த்தை நடந்துவந்ததாகவும் கூறப்படுகிறது.

டிசம்பர் மாதம் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் ஹர்திக் படேல் பாஜகவில் இணைவது அக்கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் எனக் கருதப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in