மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு: தர மறுத்த தாயை அடித்துக் கொன்ற மகன்

மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு: தர மறுத்த தாயை அடித்துக் கொன்ற மகன்

மது வாங்க பணம் தர மறுத்த தாயை மரக்கட்டையால் தாக்கி கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சமுத்திராதேவி(65). இவரது மகன் தேவேந்திர சைனி(25). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இவர் நேற்று இரவு மது பானம் வாங்க தனது தாயிடம் பணம் கேட்டார். ஆனால், அவரது தாய் சமுத்திராதேவி பணம் தர மறுத்துள்ளார்.

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தேவேந்திர சைனி தனது தாயை மரக்கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் சமுத்திரா தேவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதன் பின் அங்கிருந்து தேவேந்திர சைனி தப்பியோடி விட்டார்.

இன்று காலை சமுத்திரதேவி இறந்து கிடப்பதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், சமுந்திரா தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இக்கொலை குறித்து தேவேந்திர சைனியின் சகோதரர் ஜெய்ராம் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸார், தேவேந்திர சைனியை இன்று கைது செய்தனர். மது குடிக்க பணம் தர மறுத்த தாயை மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in