
உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று இரவு முதலே களைகட்டியது. தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை, கன்னியாகுமரி கடற்கரை உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கடற்கரைகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கூட்டமும் கோயில்களில் அலைமோதியது.
உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. தமிழகத்திலும் கடற்கரைப் பகுதிகளில் குவிந்த மக்கள் நள்ளிரவில் கேக் வெட்டியும், தங்கள் நண்பர்களைக் கட்டி அணைத்தும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் முதல் சூரிய உதயத்தைக் காண கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை கை தட்டி உற்சாகமாக வரவேற்றனர். சாதாரண காலத்திலேயே கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய உதயத்தைக் காண மக்கள் திரள்வார்கள்.
அதிலும் இப்போது சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் அதிகளவில் இருந்தது. இதேபோல் சென்னை சந்தோம், வேளாங்கண்ணி ஆலயம் உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்புப் பிரார்த்தனைகளும் நடைபெற்றன. தேவாலயங்களில் இரவு முழுவதும் பிரார்த்தனை கீதங்கள் ஒலித்தன.