இருவீட்டிலும் பெற்றோர் எதிர்ப்பு; ஒரே கயிற்றில் உயிரை மாய்த்த காதல் ஜோடி: திருவாரூர் அருகே சோகம்

பாரதிராஜா - நிஷா
பாரதிராஜா - நிஷா

உறவினர்களாக இருந்தும்கூட தங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காதல் ஜோடி  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டம், வடுவூர் அருகே உள்ள பருத்திக்கோட்டை கிராமத்தை சேர்ந்த திரிசங்கு என்பவரின் மகன் பாரதிராஜாவும்,  நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள தலைஞாயிறு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் நிஷாவும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் உறவினர்கள் என்பதால் தங்கள் காதலுக்கு பெற்றோர் சம்மதிப்பார்கள் என்று எண்ணியிருந்தனர். ஆனால் இந்த விஷயம் தெரிந்ததும் இருவரது வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னையில் வேலை பார்த்து வந்த பாரதிராஜா விடுமுறை தினம் என்பதால் ஊருக்கு வந்திருந்தார்.  அவரிடம் அலைபேசியில் தங்கள் வீட்டு நிலைமையை எடுத்துச் சொன்ன நிஷா வேதாரண்யத்தில் இருந்து நேற்று முன்தினம் கிளம்பி நேராக  பாரதிராஜாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பாரதிராஜாவின் பெற்றோரும் இவர்கள்  காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால் மனம் உடைந்த  காதல் ஜோடி வீட்டில் இருந்து வெளியேறினர்.

இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் என்ன செய்வது என்று தெரியாத  பாரதிராஜாவும், நிஷாவும் பருத்திக்கோட்டை சடையக்குளம் பகுதிக்கு சென்று பேசிக் கொண்டிருந்தனர். பின்னர்  அருகே உள்ள மரத்தில் ஒரே கயிற்றில் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

அவ்வழியாக வந்த ஊர்க்காரர்கள் இதைப் பார்த்துவிட்டு வடுவூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்குவந்த போலீஸார் இருவரது  உடல்களையும்  மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலிக்கும்போது  இருக்கும் தைரியம் அதற்கு எதிர்ப்பு வரும்போது அதை எதிர்கொள்வதிலும் இருக்க வேண்டும் என்பதை காதலர்கள் உணர்ந்தால் இதுபோன்ற விபரீத முடிவுகள் சமூகத்தில் நடக்காமல்  தவிர்க்கலாம். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in