
பிரசவத்தின் போது குழந்தையின் கை உடைக்கப்பட்டு தலையில் இருந்து ரத்தம் வெளியேறி வருவதாகக் கூறி மருத்துவர்களை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், கொடூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (28). இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த செவ்வாய்கிழமை அன்று பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், பிரசவத்தின் போது குழந்தையின் கை உடைக்கப்பட்டு இருப்பதாகவும், தலையில் இருந்து ரத்தம் வெளியேறி வருவதாகவும் குற்றம்சாட்டிய ஜெயஸ்ரீ உறவினர்கள், மருத்துவர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குழந்தையின் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது முறையான பதிலளிக்காததால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைச் சிறைபிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வந்து உறவினர்களைச் சமாதானம் செய்தனர்.