
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது என்பது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணுவிற்கு அல்வா சாப்பிடுவது போன்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி டெல்லி வரையில் அவர் நடத்திய விதவிதமான போராட்டங்கள் பேசு பொருளாகவும், விவாத பொருளாகவும் மாறியிருக்கின்றன.
இந்த நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அய்யாக்கண்ணு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் மேலாடைகளை கலைந்து அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் பலரும் கோமணத்துடன் இருந்ததால் அங்கு ஒருவித இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
விவசாயிகளின் இந்த அரை நிர்வாணப் போராட்டம் குறித்து கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் நேராக அவர்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகளை அரசுக்கு தெரியப்படுத்துவதாக அவர் உறுதியளித்தார். அதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.