உயிரைக் குடித்தது, முடி மாற்று அறுவை சிகிச்சை!

உயிரைக் குடித்தது, முடி மாற்று அறுவை சிகிச்சை!

டெல்லியல் முடி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் ஒருவர் பரிதாபமாக இறந்திருப்பது, அந்த சிகிச்சை தொடர்பான அவலங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

வீட்டின் வருவாய் ஈட்டும் ஒரே நபர் என்பதாலும், 2 சகோதரிகளின் திருமண தேவைகளை மனதில் கொண்டும் இரவு, பகல் பாராது உழைத்தார் அதர் ரஷீத். அதன்படியே சகோதரிகளின் திருமணம் உள்ளிட்ட குடும்பக் கடமைகளை முடித்தபோது அவருக்கு 30 வயதை கடந்திருந்தது. குடும்பத்தை கவனிக்கும் முனைப்பில் தன்னை முறையாக பராமரிக்காததில் ரஷீத் அதிக முடி கொட்டுதலுக்கு ஆளாகி இருந்தார். இதனால் வரன் பார்க்கையில் நிராகரிப்புக்கு ஆளாவோம் என்று அஞ்சினார். தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் வேலைபார்க்கும் ரஷீத், பணியின் பொருட்டும் தோற்றப்பொலிவு அவசியம் என நம்பினார்.

நண்பர்கள் பரிந்துரையின் பேரில் டெல்லியில் செயல்படும் முடி மாற்று அறுவை சிகிச்சை மையம் ஒன்றை நாடினார். தவணை முறையில் சில லட்சங்களை வசூலித்தவர்கள், ரஷீத் தலையில் கேசத்தை நட்டுவித்து அனுப்பினர். அந்த அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட மருந்துகள் மற்றும் தொடர்ந்து சில தினங்களுக்கு உட்கொண்ட மருந்துகள் ஆகியவை ரஷீத் உடலில் உபத்திரவங்களை கூட்டின.

மகன் ரஷீத் புகைப்படத்துடன் தாய் ஆயிஷா பேகம்
மகன் ரஷீத் புகைப்படத்துடன் தாய் ஆயிஷா பேகம்

போதாக்குறையாக முறையாக செய்யப்படாத முடி மாற்று அறுவை சிகிச்சை காரணமாக மண்டையின் மேல் தோலில் பாக்டீரிய தொற்றுகள் தலைகாட்டின. அவற்றின் விளைவாக இரத்த ஓட்டத்தில் தொற்று பரவியதில் ’செப்ஸிஸ்’ தாக்குதலுக்கு ஆளானார். வெளித்தொற்றுக்கு ஒருவரது உடல் அதீதமாய் எதிர்வினையாற்றும் இந்த போக்கால், உடலின் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழக்கத் தொடங்கும்.

இப்படி சிறுநீரகத்தின் தொடங்கி பல்வேறு உள்ளுறுப்புகள் முடங்கியதில் முகம் அகோரமாய் வீங்கி, உடல் கருத்து பெரும் வலியுடனான தனது இறுதி நாட்களை கழித்திருக்கிறார் ரஷீத். அவரது தாய் ஆயிஷா பேகமும் தனது முதிய வயதில் மகனுக்கான மருத்துவ தேவைகளில் ஈடுகொடுக்க முடியாது ஓய்ந்துபோனார். இளைஞர் ரஷீத்துக்கு நிகழ்ந்த துர்மரணம் தலைநகர் டெல்லியை உலுக்கி உள்ளது. ரஷீத்துக்கு முறையற்ற அறுவை சிகிச்சை செய்ததாக 2 மருத்துவ உதவியாளர்கள் உட்பட 4 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

சரும அழகு, புறத்தோற்றம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் பெண்களுக்கு நிகராக ஆண்களும் மெனக்கிடுவது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. திருமண சந்தையின் நெருக்கடி மற்றும் பணி நிமித்தம் காரணமாகவும் அறுவை சிகிச்சைகளை நாடும் ஆண்கள் அதிகரித்திருக்கிறார்கள். இவற்றில் பிரதானமாக முடி மாற்று அறுவை சிகிச்சை விளங்குகிறது. தேவை அதிகரித்திருப்பதால் போதிய பயிற்சி மற்றும் வளாக வசதியற்றவர்கள் கூட வருமான நோக்கில் இந்த துறையில் குவிந்து வருகின்றனர்.

முறைப்படுத்தலுக்கு அதிகம் ஆட்படாத துறை என்பதாலும், முடி மாற்று அறுவை சிகிச்சையில் அரைகுறைகளும், போலிகளும் அதிகரித்து உள்ளார்கள். கட்டணமாக லட்சங்களை வசூலிப்பவர்கள், வீரிய மருந்துகள் பயன்படுத்தி அவசரமான சிகிச்சை முடித்து அனுப்பி விடுகிறார்கள். இதனால் பக்கவிளைவுக்கு ஆளாகும் ரஷீத் போன்றவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

வாழ்வியல் நடைமுறைகளில் மாற்றம், போதிய உணவூட்டம், உடற்பயிற்சி மற்றும் உறக்கம் இல்லாதது, புகை மற்றும் மது பழக்கம், மன அழுத்தம் உள்ளிட்ட வாழ்வியல் சிக்கல்களால் இளம் வயது இருபாலருக்குமே சீக்கிரமே முடிகொட்டுவது, தோற்றப்பொலிவை இழப்பது ஆகியவற்றுக்கு ஆளாகிறார்கள். எனவே நடைமுறை வாழ்க்கையில் தேவையான மாற்றங்களை செய்வதே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமையும். அதன் பிறகும் அவசியமெனில் முறையான பயிற்சியும், அங்கீகாரமும் பெற்ற மருத்துவர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட சிகிச்சை மையங்களை நாடி, முன் ஆலோசனை மற்றும் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகே முடி மாற்று அறுவை சிகிச்சைகளை பரிசீலிப்பது நல்லது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in