ஜிம் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: முகமூடி அணிந்து வந்த கொலையாளிகள் யார்?

மகேந்திர அகர்வால்
மகேந்திர அகர்வால்

டெல்லியில் ஜிம் உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த முகமூடி மனிதர்கள் யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

கிழக்கு டெல்லியைச் சேர்ந்தவர் மகேந்திர அகர்வால்(40). இவருக்குத் திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ப்ரீத் விஹாரில் எனர்ஜி ஜிம் மற்றும் ஸ்பாவின் உரிமையாளராக இருந்த மகேந்திர அகர்வால், ஜிம் உபகரணங்களை விற்கும் நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு அவர் ஜிம்மில் இருந்தார். அப்போது துப்பாக்கி ஏந்திய மூன்று பேர் பைக்கில் வந்துள்ளனர். முகமூடி அணிந்த அவர்கள், மகேந்திர அகர்வாலைத் தேடிச்சென்று அவரைத் துப்பாக்கியால் சுட்டனர். நான்கு தோட்டக்களில் ஒன்று அவரது தலையைத் துளைத்தது.

இதில் சம்பவ இடத்திலேயே மகேந்திர அகர்வால் உயிரிழந்தார். இந்த சத்தம் கேட்டு ஜிம்மில் இருந்தவர்கள் ஓடி வந்த போது, துப்பாக்கியால் சுட்டவர்கள் பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி அம்ருதா குகுலோத் தெரிவிக்கையில்," கொல்லப்பட்டவருக்கு முன்விரோதம் எதுவும் இல்லையென அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். அடையாளம் தெரியாத நபர்களால் மகேந்திர அகர்வால் கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியுள்ளோம். அதன் காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளைத் தேடி வருகிறோம்" என்றார். மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த படுகொலை அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in