மெரினா கடற்கரையில் கிடந்த துப்பாக்கி: போலீஸ் தீவிர விசாரணை!

மெரினா கடற்கரையில் கிடந்த துப்பாக்கி: போலீஸ் தீவிர விசாரணை!

மெரினா கடற்கரையில் கிடந்த துப்பாக்கியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த துப்பாக்கியை கைப்பற்றிய போலீஸார், அதன் உரிமையாளர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மெரினா கடற்கரையில் கடலோர பாதுகாப்பு குழுமம், உயிர்காக்கும் பிரிவில் பணியாற்றி வரும் முதல் நிலைக்காவலர் ஆரோக்கியராஜ் இன்று கலங்கரை விளக்கம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நொச்சிக்குப்பத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் அவ்வழியாக மணற்பரப்பில் நடந்து வந்து கொண்டிருந்த போது கீழே கைத்துப்பாக்கி ஒன்று கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் கைத்துப்பாக்கியை எடுத்து வந்து காவலர் ஆரோக்கியராஜிடம் கொடுத்துள்ளார். உடனே காவலர் ஆரோக்கியராஜ் கைத்துப்பாக்கியை மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்ததை அடுத்து சென்னை கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அப்புகாரின் அடிப்படையில் மெரினா போலீஸார் வழக்குப்பதிவு செய்து கீழே கிடந்த கைத்துப்பாக்கியின் உரிமையாளர் யார்? தோட்டக்கள் இல்லாத துப்பாக்கி இங்கு எப்படி வந்தது? என்பது குறித்து பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மெரினாவில் துப்பாக்கி கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in