வேட்புமனுத் தாக்கலின்போது மேளதாளங்களுக்குத் தடைபோட்ட குஜராத் அமைச்சர்!

பால விபத்தில் பலியானவர்களுக்கு மரியாதை என விளக்கம்
குஜராத் உள் துறை அமைச்சர் ஹர்ஷ் சங்க்வி
குஜராத் உள் துறை அமைச்சர் ஹர்ஷ் சங்க்வி

இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யும் குஜராத் உள் துறை அமைச்சர் ஹர்ஷ் சங்க்வி, தனக்காக மேளதாளங்கள், ஸ்பீக்கர்கள் ஏற்பாடு வேண்டாம் என்று தனது ஆதரவாளர்களிடம் அறிவுறுத்தியிருக்கிறார். மோர்பி தொங்கு பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இதைச் செய்வதாகவும் விளக்கமளித்திருக்கிறார்.

150 ஆண்டுகளுக்கு முன்னர் மச்சூ நதியின் குறுக்கே கட்டப்பட்ட தொங்கு பாலம், புனரமைப்புப் பணிகளுக்காக ஏழு மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், குஜராத் புத்தாண்டையொட்டி கடந்த அக்டோபர் 26-ல் மீண்டும் திறக்கப்பட்டது. இந்தப் பாலத்தைத் திறக்க 8 முதல் 12 மாதங்கள் வரை ஆகும் எனக் கூறப்பட்ட நிலையில், உரிய அனுமதி பெறாமல் இந்தப் பாலம் திறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அக்டோபர் 30-ம் தேதி,இந்தப் பாலம் திடீரென அறுந்துவிழுந்தது. பாலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் இருந்த நிலையில் ஏற்பட்ட நூற்றுக்கணக்கானோர் மச்சூ நதியில் விழுந்து மூழ்கினர். 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பாறைகள் நிறைந்த பகுதிகள் என்பதால் இன்னும் பலர் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

அலட்சியம், முறைகேடு எனப் பல புகார்களுக்கு உள்ளாகியிருக்கும் இந்தக் கோர விபத்து, பாஜக தலைமையிலான குஜராத் அரசுக்குக் கடும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை வைத்து பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்துவருகின்றன.

இந்நிலையில், ஹர்ஷ் சங்க்வி, சூரத் மாவட்டத்தில் உள்ள மஜுரா தொகுதியில் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யவிருக்கிறார் அம்மாநில உள் துறை அமைச்சர் ஹர்ஷ் சங்க்வி. இந்த நிகழ்வின்போது தனது ஆதரவாளர்கள் மேளதாளங்களையோ ஸ்பீக்கர்களையோ பயன்படுத்த வேண்டாம் எனத் தனது ஆதரவாளர்களுக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறார். ஊர்வலத்தைக்கூட சிறிய அளவில் நடத்த அவர் திட்டமிட்டிருப்பதாக பாஜகவினர் கூறியிருக்கிறார்கள். மோர்பி பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அவற்றைத் தவிர்த்திருப்பதாக ஹர்ஷ் சங்க்வி விளக்கமளித்திருக்கிறார்.

ஏற்கெனவே குஜராத் மக்கள் மத்தியில் இந்த விபத்து தொடர்பான அதிருப்தி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அமைதியான முறையில் வேட்புமனுத் தாக்கல் செய்ய அவர் முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், அவர் வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்வை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in