மோர்பி பாலம் அறுந்த துயரம்: நீதிமன்றத்தால் குஜராத் அரசுக்கு புதிய நெருக்கடி

மோர்பி பாலம் அறுந்த துயரம்: நீதிமன்றத்தால் குஜராத் அரசுக்கு புதிய நெருக்கடி

மோர்பி பால விபத்து தொடர்பாக உயர் நீதிமன்றம் அனுப்பும் நோட்டிஸ், சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் குஜராத் மாநிலத்தின் ஆளும் பாஜக அரசுக்கு அடுத்த நெருக்கடியை தந்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்து பின்னணி கொண்ட மோர்பி பாலம், அக்.30 அன்று அறுந்து விழுந்து விபத்துக்குள்ளாது. இந்த துயர சம்பவத்தில் 55 குழந்தைகள் உட்பட 140 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகி வரும் பாஜக அரசுக்கு நெருக்கடிகள் அதிகரித்தன. பெருவாரியான வெற்றியுடன் எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அச்சாரமாய் குஜராத் தேர்தல் முடிவை எதிர்பார்த்திருந்தோருக்கு இடி விழுந்துள்ளது. அந்தளவுக்கு மோர்பி பாலம் பராமரிப்பில் ஊறியிருந்த ஊழலும், அலட்சியமும் நாளொரு தகவலாக வெளிப்பட்டு வருகின்றன.

பாலத்தின் மராமரத்து பணிக்காக ஒரேவா என்ற நிறுவனத்திடம் ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அந்த நிறுவனம் பெரும் லாபத்துடன் இன்னொரு நிறுவனத்துக்கு ஒப்பந்த பணிகளை தள்ளி விட்டது. மேற்படி துணை ஒப்பந்த நிறுவனம் ஒதுக்கப்பட்ட ரூ.20 கோடியில் ரூ.12 லட்சத்துக்கு மட்டுமே பணிகள் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அவையும் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட மேம்போக்கான பணிகள் மட்டுமே. துயர் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மோர்பி உள்ளாட்சி நிர்வாகம் மட்டுமன்றி மாநில அரசுக்கு எதிராகவும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.

இவற்றுக்கு மத்தியில் குஜராத் உயர் நீதிமன்றம் ஊடக செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து மோர்பி பால வழக்கை கையில் எடுத்திருப்பதுடன், விளக்கம் கேட்டு மாநில அரசுக்கு நோட்டிஸ் விடுத்துள்ளது. மோர்பி பாலம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து 10 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் விளக்கம் சமர்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை செயலர், மாநில உள்துறை அமைச்சகம், முனிசிபாலிட்டி கமிஷனர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு நோட்டிஸ் அனுப்பப்படுகின்றன. தலைமை நீதிபதி அரவிந்த் குமார் மற்றும் நீதிபதி அசுதோஷ் சாஸ்திரி ஆகியோர் இதற்கான உத்தரவுகளை பிறப்பித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in