அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு: ஆஆக-வுக்குப் பதிலடியாக அதிரடி காட்டிய குஜராத் பாஜக அரசு

அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு: ஆஆக-வுக்குப் பதிலடியாக அதிரடி காட்டிய குஜராத் பாஜக அரசு

சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குஜராத் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திவந்த நிலையில், அவர்களின் சில முக்கியக் கோரிக்கைகளுக்கு அம்மாநில பாஜக அரசு செவிசாய்த்திருக்கிறது. அதன்படி காவலர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோருக்கான ஊதியம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

குஜராத் மாநில ஊழியர்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் கீழ், அம்மாநில அரசு ஊழியர் சங்கங்கள் இணைந்து செயல்படுகின்றன. அரசு ஊழியர்களின் ஊதியத்தில் திருத்தம் செய்ய வேண்டும், ஒப்பந்த முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், கூடுதல் பணிகளுக்கான படியை அதிகரிக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி இச்சங்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. 26,000 சுகாதாரத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து, அரசு ஊழியர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐந்து பேர் கொண்ட அமைச்சரவைக் குழு ஒன்றை குஜராத் அரசு நியமித்தது.

பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், போலீஸ் கான்ஸ்டபிள்கள், பஞ்சாயத்து செயலாளர்கள், அங்கன்வாடி, ஆஷா (ASHA) சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் சம்பளத்தை உயர்த்த அம்மாநில அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி ஆகஸ்ட் 14-ல், காவலர்களின் சம்பளத்தை அதிகரிக்க காவல் துறைக்கு 550 கோடி ரூபாய் நிதித் தொகுப்பை அரசு வழங்கியது. கிராம பஞ்சாயத்து குமாஸ்தாவுக்கன படியை 800 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. அது அவர்களது மாதச் சம்பளத்துடன் கூடுதலாக வழங்கப்படும்.

குறிப்பாக, குஜராத் காவல் துறையினருக்குக் குறைந்த சம்பளம் வழங்கப்படுவதாக, டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து விமர்சித்துவந்த நிலையில் இந்நடவடிக்கையில் அம்மாநில அரசு இறங்கியிருக்கிறது. வரும் டிசம்பர் மாதம் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தொடர்ந்து பாஜகவுக்கு எதிராகக் கடுமையாகப் பிரச்சாரம் செய்துவருகிறார் கேஜ்ரிவால். இந்நிலையில், அவருக்குப் பதிலடியாக இந்நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, நிலுவையில் இருக்கும் படிகளை வழங்குவதாகவும் அரசு அறிவித்திருக்கிறது.

அதேசமயம், புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு (என்பிஎஸ்) பதிலாகப் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் எனும் கோரிக்கையை குஜராத் அரசு இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in