குஜராத்தில் அமைக்கப்பட்ட எஃகு சாலை: குண்டும் குழியுமான சாலைக்கு மாற்றாகுமா?

குஜராத்தில் அமைக்கப்பட்டிருக்கும் எஃகு சாலை
குஜராத்தில் அமைக்கப்பட்டிருக்கும் எஃகு சாலைசிஎஸ்ஐஆர் ட்விட்டர் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட படம்

குஜராத்தின் சூரத் நகரின் ஹஜீரா துறைமுகத் தொழில்பேட்டை பகுதியில், முதன்முறையாக எஃகு கழிவுகளைக் கொண்டு 1 கிலோமீட்டர் தொலைவுக்குச் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. மத்திய எஃகு அமைச்சகம், நிதி ஆயோக் ஆகியவற்றின் உதவியுடன் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்), மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (சிஆர்ஆர்ஐ) ஆகியவை இந்தச் சாலை உருவாக்கத்தை முன்னெடுத்திருக்கின்றன. குப்பையிலிருந்து வளத்துக்கு மற்றும் தூய்மை இந்தியா திட்டம் ஆகியவையும் இந்த முயற்சிக்குக் கைகொடுத்திருக்கின்றன.

1 கிலோமீட்டர் தொலைவுக்கு 6 பாதைகள் கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தச் சாலை, வழக்கமாகப் பயன்படுத்தப்படும் தார், ஜல்லி போன்ற பொருட்களுக்கு மாற்றாக முழுக்க முழுக்க எஃகு கழிவுப் பொருட்களைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. வழக்கமான சாலையைவிடவும் இதன் தடிமன் 30 சதவீதம் குறைந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, கடும் மழைக்காலங்களில் குண்டும் குழியுமாக மாறும் தார்ச்சாலைகளுக்கு இந்த எஃகு சாலைகள் புதிய மாற்றாக அமையும் எனும் எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

மார்ச் 22-ல் பயன்பாட்டுக்கு வந்த இந்தச் சாலையில், இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்றிருக்கின்றன. தினமும் செல்லும் வாகனங்களின் சராசரி மொத்த எடை என சுமார் 18 முதல் 30 டன் வரையிலான எடையை இந்தச் சாலை தாங்கியிருக்கிறது. எனினும், சின்ன விரிசல் கூட இதுவரை விழவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கழிவாகும் எஃகு பொருட்கள் 19 மில்லியன் டன் ஆகும். 2030-ம் ஆண்டுவாக்கில் எஃகு கழிவுப் பொருட்கள் 50 மில்லியனாக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், எஃகு கழிவுப் பொருட்களைக் கொண்டு இதுபோன்ற சாலைகளை அமைப்பது, தரமான சாலைவசதிக்கும், எஃகு கழிவுகள் மறுசுழற்சிக்கும் உதவும் எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இந்தச் சாலை வெற்றிகரமாக அமையும்பட்சத்தில், நெடுஞ்சாலைகளை எஃகு சாலைகளாக அமைக்கலாம் என மத்திய அரசு பரிசீலித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in