‘தொங்கு பாலத்தைப் புனரமைத்தது கடிகார நிறுவனம்’ - குஜராத் முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தும் கேஜ்ரிவால்

‘தொங்கு பாலத்தைப் புனரமைத்தது கடிகார நிறுவனம்’ - குஜராத் முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தும் கேஜ்ரிவால்

குஜராத்தில் அறுந்து விழுந்த தொங்கு பாலத்தைப் புனரமைத்தது கடிகாரம் தயாரிக்கும் நிறுவனம் எனக் குற்றம்சாட்டியிருக்கும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பதவிவிலக வேண்டும்; தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் மச்சூ நதியின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் பிரிட்டிஷ் காலத்தைச் சேர்ந்தது. 1879-ல் கட்டப்பட்ட இந்தப் பாலம், மோர்பி நகராட்சியால் நிர்வகிக்கப்பட்டுவந்தது. புனரமைப்புப் பணிகளுக்காகச் சில மாதங்கள் இந்தப் பாலம் மூடப்பட்டது. ஒரேவா எனும் தனியார் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்ட நிலையில், 5 நாட்களுக்கு முன்புதான் இந்தப் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.30) அந்தப் பாலத்தில் குவிந்த நிலையில் பாலம் திடீரென அறுந்து விழுந்தது. இந்த விபத்தில், பெண்கள், குழந்தைகள் உட்பட 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. அத்துடன், இந்தப் பாலத்தைப் புனரமைக்கும் பணிகளைச் செய்த ஒரேவா நிறுவனம் கடிகாரங்களையும், இ-பைக்குகளையும் தயாரித்துவந்ததது குறித்து செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இதுதொடர்பாகப் பேசியிருக்கும் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால், “பாலத்தைப் புனரமைக்கும் ஏலம் கடிகாரம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது ஏன்? முதல் தகவல் அறிக்கையில் அந்த நிறுவனத்தின் பெயரோ, அதன் உரிமையாளர்களின் பெயர்களோ இடம்பெறவில்லை. அவர்களுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதையே இது காட்டுகிறது” என்று கூறினார். அந்நிறுவன உரிமையாளர்களிடமிருந்து ஆளுங்கட்சி ஒரு பெரும் தொகையை நன்கொடையாகப் பெற்றிருப்பதாகக் குற்றம்சாட்டிய அர்விந்த் கேஜ்ரிவால், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த விபத்து தொடர்பாக, ஒரேவா நிறுவனத்தின் மேலாளர்கள், டிக்கெட் விநியோகித்தவர்கள், புனரைப்புப் பணிகளின் ஒப்பந்ததாரர்கள், கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியைச் செய்துவந்த காவலாளிகள் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். எனினும், ஒரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநரான ஜெயசுக் படேல் தலைமறைவாகிவிட்டதாக என்டிடிவி செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூற மோர்பி அரசு மருத்துவமனைக்குப் பிரதமர் மோடி வருவதையொட்டி, அம்மருத்துவமனை அவசர அவசரமாகப் புனரமைப்புப் பணிகள் நடந்தது இன்னொரு சர்ச்சையானது. ‘பலர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் பாஜகவினரோ நிகழ்ச்சி ஏற்பாட்டு வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்கள்’ என காங்கிரஸ் கட்சி விமர்சித்திருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால், “மருத்துவமனை அழகுபடுத்தப்பட்டது வேறொரு விவகாரம். அது மூடி மறைக்கப்பட்டுவிட்டது. இனியும் முதல்வர் பூபேந்திர படேல் பதவியில் தொடரக்கூடாது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும். உடனடியாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்றார்.

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் மாதம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in