குஜராத் பால விபத்தில் பலியானோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: பழுதுபார்க்கும் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

மோர்பி பால விபத்து
மோர்பி பால விபத்துகுஜராத் பால விபத்தில் பலியானோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: பழுதுபார்க்கும் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

குஜராத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் இடிந்து விழுந்து 135 பேர் உயிரிழப்புக்குக் காரணமான மோர்பி தொங்கு பாலத்தை பராமரித்து வந்த கடிகார தயாரிப்பு நிறுவனமான ஓரேவா குழுமம், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் இடைக்கால இழப்பீடாக ரூ. 10 லட்சம் மற்றும் காயமடைந்தோருக்கு ரூ.2 லட்சத்தை 4 வாரங்களுக்குள் வழங்க குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றின் மீது இருந்த பிரிட்டன் காலத்து தொங்கு பாலம் கடந்த ஆண்டு அக்டோபர் 30 ம் தேதி இடிந்து விழுந்ததில் 135 பேர் உயிரிழந்தனர் மற்றும் 56 பேர் காயமடைந்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சோனியா கோகானி மற்றும் நீதிபதி சந்தீப் பட் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் நேற்று உத்தரவை வழங்கியது.

அந்த உத்தரவில், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் ,காயமடைந்த ஒவ்வொருவருக்கும் ரூ.2 லட்சம் இடைக்கால இழப்பீடாக நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த பொதுநல வழக்கு விசாரணையின் போது, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்க பாலம் பராமரிப்பு நிறுவனமான அஜந்தா மேனுபேக்சரிங் லிமிட்டெட்(ஒரேவா குரூப்) முன்வந்தது. ஆனால், அது போதாது என்று நீதிபதி கோகானி கூறினார்.

மேலும், மத்திய, மாநில அரசுகள் இணைந்து இதுவரை பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளதாக நீதிமன்றம் இடைக்கால உத்தரவில் கூறியுள்ளது. இந்த விபத்தினால் ஆதரவற்றவர்களாக மாறிய ஏழு குழந்தைகளின் பொறுப்பை ஏற்க ஒரேவா நிறுவனம் முன்வந்துள்ளதாக நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in