புதுப்பிக்கப்பட்ட பாலம் 5 நாட்களில் அறுந்து விழுந்து விபத்து - பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு: குஜராத்தில் சோகம்

புதுப்பிக்கப்பட்ட பாலம் 5 நாட்களில் அறுந்து விழுந்து விபத்து - பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு: குஜராத்தில் சோகம்

குஜராத்தில் பிரிட்டிஷ் காலத்து பாலம் புதுப்பிக்கப்பட்ட ஒரு வாரத்தில் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத் அகமதாபாத்தில் இருந்து 200 கிமீ தொலைவில், மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே உள்ள தொங்கு பாலம் நேற்று மாலை 6.42 மணியளவில் சத் பூஜையுடன் தொடர்புடைய சில சடங்குகளைச் செய்ய சுமார் 500 பேர் கூடியிருந்தபோது இடிந்து விழுந்தது.

குஜராத்தின் மோர்பியில் கேபிள் பாலம் அறுந்து விழுந்த பயங்கர சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை 132 ஐத் தாண்டியது. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் இந்திய கடற்படை வீரர்கள் மச்சு ஆற்றுப் படுகையில் இருந்து மேலும் உடல்களை மீட்டனர் என்று மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்தார். சுமார் 19 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், படகுகளை பயன்படுத்தி மீட்பு பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய அமைச்சர் சங்கவி, “தீயணைப்புத் துறை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் காவல்துறையின் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்குள் மக்களை மீட்டனர். மேலும், என்.டி.ஆர்.எஃப்., ராணுவம் மற்றும் கடற்படை குழுவினர் உடல்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எங்கள் மக்கள் இரவு முழுவதும் வேலை செய்கிறார்கள். விபத்து ஏற்பட காரணமானவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்வதற்கான நடவடிக்கையையும் நாங்கள் தொடங்கியுள்ளோம்” என்று கூறினார்.

சுமார் 150 ஆண்டுகள் பழமையான 756 மீட்டர் நீளமுள்ள இந்த கேபிள் பாலம் சில மாதங்களுக்கு முன்பு மறுசீரமைக்கப்பட்டது. அந்த பாலம் குஜராத்தி புத்தாண்டையொட்டி அக்டோபர் 26-ம் தேதி புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. நேற்று அந்த பாலத்தில் சத் பூஜைக்காக சுமார் 500 பேர் இருந்தனர். அதன் கொள்ளளவு இதைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.

இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 304 மற்றும் 308 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாலத்தின் பழுது மற்றும் புதுப்பித்தலில் ஏற்பட்ட குளறுபடிகளைக் கண்டறிய ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சங்கவி கூறினார்.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் நேற்று இரவு சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை நேரில் பார்வையிட்டு, காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மாவட்ட மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் கூறினார்.

மூன்று நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சரிடம் பேசி, மீட்புப் பணிகளை அவசரமாக மேற்கொள்ள கோரிக்கை வைத்தார்.

இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அதிஷி கேட்டுக் கொண்டார். “பாலத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in