ஜிஎஸ்டி எண்ணை தவறாக பயன்படுத்தி பணம் மோசடி செய்த நபரை கோவை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1500 விசிடிங் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவையை சேர்ந்த கண்ணன் என்பவர் மஹாலஷ்மி ஏஜென்சிஸ் என்ற நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தங்கள் நிறுவனத்தின் ஜி.எஸ்.டி. எண்ணை யாரோ தவறாக பயன்படுத்தி பணம் பெற்று மோசடி செய்துவிட்டதாக நேற்று கொடுத்த புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக சீனிவாசன் (47) என்பவரை இன்று சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சீனிவாசன் போலியான ஆவணங்களை தயாரித்து அதன் மூலம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்து மொபைல் போன்கள், மின்னணு சாதனங்கள் சிம்கார்டுகள், பல்வேறு நிறுவனங்களின் பெயரில் உள்ள 1500 விசிடிங் கார்டுகள், 5 ஆயிரம் போலி ரூபாய் தாள்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இது போன்று யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.