அனைத்தும் ஆளும் அதானி: அதிவேக பாய்ச்சல்கள்... அதிரடி சர்ச்சைகள்!

அனைத்தும் ஆளும் அதானி:  அதிவேக பாய்ச்சல்கள்... அதிரடி சர்ச்சைகள்!

‘கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை முதல் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் சத்ய நாதெள்ளா வரை சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களை கட்டியாள்பவர்களில் கணிசமானோர் இந்தியர்களே. ஐஐடி உள்ளிட்ட இந்தியாவின் உச்ச உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பை முடித்த இவர்கள், அயல்நாடுகளுக்காக தங்கள் மூளைகளை வாடகைக்கு விடுவதாக இந்தியர்கள் மத்தியில் பொருமல் உண்டு. இந்த குறையை நிவர்த்தி செய்வதற்காக வெறுமனே பத்தாம் வகுப்பு தேறிய ஒருவர், இந்தியாவை ஒரு நிறுவனமாக மாற்றி நிர்வகித்து வருகிறார். அவர் பெயர் கௌதம் அதானி!’ - எம்பிஏ பயிலும் மாணவர்கள் மத்தியில் பேராசிரியர்கள் கையாளும் நகைச்சுவை உதாரணங்களில் இதுவும் ஒன்று.

நாட்டு நடப்பின்படி அவல நகைச்சுவையான இதன் பின்னே நிறைய அரசியலும் ஒளிந்திருக்கிறது. இந்தியாவின் சகல துறைகளிலும் தனது விழுதுகளை பரப்பி, நாட்டை ஆள்வோர் முதல் வயிற்றுப்பாட்டுக்கு பிழைப்போர் வரை அனைவரின் போக்கையும் நிர்ணயிக்கும் சக்தியாக அதானி குழுமமும் அதன் தலைவர் கௌதம் அதானியும் வளர்ந்து வந்ததன் பாதை புதிர்கள் நிறைந்தது.

துரத்திய தோட்டா

2008 நவம்பர் 26 அன்று மும்பை தாஜ் ஹோட்டலில் 10 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி, கண்ணில் பட்டவர்களை எல்லாம் சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளினார்கள். பாய்ந்த குண்டுகளின் மத்தியில் அங்குமிங்குமாக தப்பியோடியவர்கள், கிடைத்த மறைவிடங்களில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பதுங்கினர். அவர்களில் கௌதம் அதானியும் ஒருவர். அவரை நோக்கிய தோட்டா ஒன்று பத்தடி தொலைவில் ஒரு தடுப்பில் தெறித்தது.

அதானிக்கு என தனித்துவமான கனவுகள் இருந்தன. அவை அப்போதுதான் கைகூடியும் வந்தன. அடுத்த நாள் கமோண்டோ படை ஹோட்டலுக்குள் நுழையும் வரை எதுவும் நிச்சயமின்றி இருந்தார் அதானி. ரிஸ்க் எடுப்பதும், உரிய பலனுக்கு காத்திருப்பதுமாக, ஒட்டுமொத்த வாழ்க்கைக்கான பாடங்கள் அன்றைய அனுபவத்தில் அவருக்கு கிடைத்தன.

இன்று உலகின் பெரும் பணக்காரர்களில் 3-ம் இடத்தில் இருக்கிறார் அதானி. முகேஷ் அம்பானி வகித்திருந்த இந்திய மற்றும் ஆசிய முதலிடங்களை கைப்பற்றிய அதானி உலகளவிலும் முன்னேறி வருகிறார். அதற்காக அதானி கடந்து வந்த பாதையும், அவரை துரத்திய தோட்டா போலவே விறுவிறுப்பும் மர்மமும் கலந்தவை.

கௌதம் அதானி
கௌதம் அதானி

வைரம் புகட்டிய அனுபவம்

சாந்திலால் அதானி என்ற சாமானிய குஜராத்தி வணிகரின் 8 வாரிசுகளில் ஏழாவதாக பிறந்தவர் கௌதம் அதானி. பத்தாம் வகுப்பு முடித்ததுமே மும்பைக்கு ரயிலேறினார். அங்கே வைரத்தை தரம் பிரிக்கும் பணியில் அவருக்கான வாழ்நாள் பாடம் கிடைத்தது. வைரத்தின் தரம் பார்க்கும் நாசூக்கான பணியைவிட, வர்த்தகருக்கான லாபம் அதிகம் பொதிந்திருக்கும் வைரத்தின் ஆதி நிலை குறித்து அதிகம் யோசிக்கலானார்.

பின்னர் அஹமதாபாத்தில் தனது அண்ணனின் பிளாஸ்டிக் நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றபோது, பிளாஸ்டிக்கின் லாபம் எங்கே இருக்கிறது என பின்னோக்கி ஆராய்ந்தார். விலை மலிவாக வெளிநாடுகளில் இருந்து கச்சா பிளாஸ்டிக் இறக்குமதி செய்யப்படுவதையும், அதுவே அதிக லாபம் வைத்து இந்தியாவில் விற்பனை ஆவதையும் கண்டுகொண்டார். அந்த பாதையில் சொந்தமாக ஒரு தொழில் நிறுவனம் ஆரம்பித்தார் அதானி.

அதன் பின்னரும் கண்ணில் படும் தொழில்துறைகளை எல்லாம் ஆராயவும், அவற்றில் சாதிக்கவும் உள்ளார்ந்த உத்வேகத்தை கண்டுகொண்டார். அதிலும் தொழில் நிமித்தம் சரக்குகள் வந்திறங்கும் துறைமுகத்துக்கு அடிக்கடி பயணப்படும் அதானி, சொந்தமாக ஒரு துறைமுகம் இருப்பின் எப்படி பல்தொழில்களை ஒரே குடையின் கீழ் விஸ்தரிப்பு செய்யலாம் என்றெல்லாம் யோசித்தார். துறைமுகத்தில் பரிமாறப்படும் எல்லா சரக்குகளும் அவரது வணிக மூளையை ஈர்த்தன. அவற்றில் தடம் பதிப்பதற்கான வாய்ப்புகளுக்காக காத்திருக்கவும் ஆரம்பித்தார்.

30 ஆண்டுகள் கழித்து அதானியின் கனவுகள் ஈடேறி வருகின்றன. ’துறைமுகம் முதல் விமான நிலையம் வரை; நிலக்கரி சுரங்கம் முதல் மீடியா வரை...’ 50-க்கும் மேலான துறைகளில் தனது வியாபார எல்லைகளை விரித்து பரந்திருக்கிறார் கௌதம் அதானி. குஜராத்திகளுக்கே உரித்தான வணிக முனைப்பும், ஓயாத உழைப்பும் மட்டுமல்ல, அதிகாரத்தை வளைக்கும் அங்குச உத்திகளை அதானி கண்டுகொண்டதுமே அவரது விஸ்வரூப வளர்ச்சிக்குக் காரணமானது.

ராஜிவ் காந்தி முதல் நரேந்திர மோடி வரை

இன்று பாஜகவின் தனிப்பெரும் தலைவர்களான மோடி மற்றும் அமித் ஷாவின் அன்புக்குரியவராக வளர்ந்திருக்கிறார் அதானி. மோடியின் அரசியல் வளர்ச்சிக்கு இணையாக கௌதம் அதானியின் வணிக வளர்ச்சி பார்க்கப்படுகிறது. ஆனபோதும் அதானியின் வணிக ஆதாயம் காங்கிரஸின் ராஜீவ் காந்தியிடம் இருந்தே ஆரம்பித்தது. எண்பதுகளின் இறுதியிலும், தொண்ணூறுகளின் தொடக்கத்திலுமாக, ராஜீவ் காந்தி மற்றும் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் காலத்தில், தாராளமயத்தின் பெயரில் உலக சந்தைக்கான கதவுகள் அகலத் திறக்கப்பட்டன. அதில் பலனடைந்த இளம் தொழில்முனைவோரில் அதானியும் ஒருவர். ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் எவரையும் அவர் நெருங்கியதில்லை. நேரடி அரசியல் தொடர்பு என்பது பாஜகவிடமே தொடங்கியது.

முந்த்ரா துறைமுகம் இன்று
முந்த்ரா துறைமுகம் இன்று

பாஜக ஆட்சியில் கேஷூபாய் படேல் குஜராத் முதல்வராக இருந்தபோது முந்த்ரா துறைமுகத்தை 30 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் அதானி நிறுவனத்துக்கு உரித்தாக்கினார். ஆனால், அடுத்து வந்த முதல்வரான மோடி, கேஷூபாய் படேல் முகாமை சேர்ந்தவர் என்று கௌதம் அதானியை ஒதுக்கியதும் நடந்தது.

கோத்ரா கலவரத்தை முன்னிட்டு, குஜராத் மாநிலத்தை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் புறக்கணித்த போது, குஜராத் மண்ணின் மைந்தர்களாக மோடிக்கு தோள் கொடுத்தவர்களில் அதானியும் அடங்குவார். கோத்ரா வன்முறை கசப்பின் சுவடுகளை கழுவ முயன்ற மோடிக்கு, மிகப்பெரும் முதலீடுகளை குஜராத்துக்கு வரவழைப்பேன் என்று சூளுரைத்த அதானியை பிடித்துப்போனது. சொன்னது போலவே அதானி செய்து காட்டியதும், கைமாறுக்கு மோடியும் அதானி மீது கரிசனம் கொண்டார்.

அப்படித்தான் முந்த்ரா துறைமுகத்தை ஒட்டிய 140 சதுர மைல் பரப்பினை சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக சகாய விலையில் பெற்றார் அதானி. அதன் பின்னர் மோடியோடு சேர்ந்து அதானியும் தனது வளர்ச்சியை தக்க வைத்துக்கொண்டார்.

முன்னுதாரண அம்பானியை முந்தினார்

அம்பானி தொழில் சாம்ராஜ்ஜியத்தை நிர்மாணித்த திருபாய் அம்பானியை தனது வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே சந்தித்த கௌதம் அதானி, அவரையே முன்மாதிரியாக கொண்டு வளர்ந்தார். குஜராத்தின் ஜாம் நகரில் அம்பானி நிறுவனத்துக்கு அனுகூலம் தேடித்தந்த துறைமுக யோசனையை பின்பற்றியே, முந்த்ரா துறைமுகத்தில் தனது கனவுகளை கட்டியெழுப்ப ஆரம்பித்தார் அதானி. அன்று தொடங்கி இன்று வரை அம்பானிகளின் வெற்றிகளை பின்தொடரவும், அவர்களின் சறுக்கல்களில் பாடம் கற்பவராகவும் இருந்து வருகிறார் அதானி.

இன்று பசுமை எரிசக்தி திட்டங்களில் இந்தியாவில் முதலிடம் வகிக்கும் அதானி, அத்துறையில் அம்பானி பிரவேசித்ததை அறிந்ததும், மறுதினமே தானும் அதில் நுழைந்தார். இதற்காக அவர் தயங்கவும் இல்லை. போட்டியாளரிடமிருந்து கற்ற பாடங்களைக் கொண்டு அவர்களையே முந்தவும் செய்திருக்கிறார் அதானி. இப்படி, 2 தலைமுறைகளில் அம்பானி அடைந்த உச்சத்தை, அதானி தனது பாய்ச்சல் மூலமே முதல் தலைமுறையில் எட்ட முடிந்தது.

முகேஷ் அம்பானி- கௌதம் அதானி
முகேஷ் அம்பானி- கௌதம் அதானி

அரசியல்வாதிகள் மற்றும் அதிகார மட்டங்களைச் சரிகட்டுவதில் திருபாய் அம்பானி பேர்போனவர். அவரது ஏகலைவனான அதானி அத்துறையில் வித்தகரானார். குஜராத் அரசியலில் வளர்ந்து வரும் நரேந்திர மோடியின் எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்தார் அதானி. அவரை நெருங்கி முழுமுதல் அணுக்கராக மாறிப்போனார். கோத்ரா வன்முறை கறையை கழுவும் முயற்சியிலான மோடியின் குஜராத் மாடல் வளர்ச்சிக்கு அதானியும் உடன் பயணித்தார்.

தனது கார்ப்பரேட் ஜெட் விமானத்தை முதல்வர் மோடியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஒதுக்கினார் அதானி. இன்னபிற ஆதாய பரிமாறல்கள் அனைத்திலும் துணை நின்றார். கைமாறாக அதானிக்கு என்றே மாநிலத்தின் தொழிற்கொள்கைகள் தளர்த்தப்பட்டன. பிரதமராக பொறுப்பேற்றதும் மோடியின் பிரான்ஸ் முதல் கனடா வரையிலான அலுவல் பயணங்களில் அதானியும் உடன் பறந்தார். அப்படி கிட்டிய பங்களாதேஷ் தேசத்துக்கான மின் விநியோகத் திட்டம், அதானி குழுமத்துக்கு அடுத்த பாய்ச்சல் தந்தது. தொழில் வளர்ச்சி என்ற பளபளப்பின் மறுபக்கத்தில், சாமானியர்களின் வயிற்றில் அடிக்கும் விநோதமும் வெளிப்பட்டது.

மக்கள் முகத்தில் ‘நிலக்’கரி பூசிய அதானி

ஜார்கண்ட் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் 2,300 ஏக்கர் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து, இறக்குமதி நிலக்கரி கொண்டு 1,600 மெகாவாட் மின் உற்பத்தியை 60 கிமீ அப்பாலிருக்கும் பங்களாதேஷ் நாட்டுக்கு விற்கும் திட்டம் அதானிக்கு பெற்றுத்தரப்பட்டது. இந்தியாவின் நலித்த மாநிலங்களில் இரண்டாவது இடத்திலிருக்கும் ஜார்கண்டின் கோடா மாவட்டத்தில், அதானியின் அனல் மின் நிலையம் புகுந்ததில் அப்பகுதியின் வாழ்வாதாரமும், நீராதாரமும் வறண்டன. வேலை கிடைக்கும், மின்சாரம் கிடைக்கும், ஏரியா வளம் பெறும் என்று நம்பிய மக்கள் ஏமாந்து போனார்கள். இப்போது வரை அங்குள்ள மோடியா கிராமத்தில் மோடி மற்றும் அதானிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன.

அதானி அனல் மின் நிலையங்களில் ஒன்று
அதானி அனல் மின் நிலையங்களில் ஒன்று

இப்படி 4 அனல் மின்நிலையங்கள் அவற்றுக்கான நிலக்கரி தேவைக்காக 18 நிலக்கரி சுரங்கங்கள் என தேசம் நெடுக கால்பரப்பியது அதானி குழுமம். நிலக்கரி தேவைக்காக ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா உள்ளிட்ட அயல்நாடுகளின் சுரங்கங்களையும் வளைத்துப் போட்டது. அதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் மூண்ட போராட்டமே, ‘அதானி வாட்ச்’ என்ற பிரத்யேக இணையதளத்தை உருவாக்கி ஒரு இயக்கமாக சர்வதேச அளவில் எதிர்ப்பாளர்கள் திரள காரணமானது. ஆனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டங்கள் எதையும் அதானி குழுமம் பொருட்படுத்தவில்லை என்பது, குழுமத்தின் பெருமளவு வருமானம் நிலக்கரி சார்ந்த தொழில்களில் இருந்தே கொட்டுவதில் தெரிந்து கொள்ளலாம்.

நிலக்கரி எரிப்பதால் நேரும் புவிவெப்பமடைதலுக்கு எதிராக போராடும் அமைப்புகளால் புதிய நெருக்கடிக்கு ஆளானபோது, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையிலும் அதானி குழுமம் கால்வைத்தது. இன்று அத்துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாகவும் வளர்ந்திருக்கிறது. இப்படி தனக்கான சவால்களையும் சாதனைக்கான படிக்கல்லாக மாற்றுவது அதானியின் உத்திகளில் ஒன்று.

ஆனால், நிறுவன வளர்ச்சிக்காக அதிகாரத்தை வளைப்பதாக அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் பஞ்சமில்லை. நிலக்கரி சுரங்க வர்த்தகத்தை அதானி தரப்புக்கு சகாயம் செய்ததன் மூலமே, மோடி தலைமையிலான அரசு ரூ.82 ஆயிரம் கோடிக்கு சலுகை காட்டியிருப்பதாக ’வாஷிங்டன் போஸ்ட்’ புலனாய்வு கட்டுரை வரைந்திருக்கிறது. அரசின் அதானி சார்புக்கு ஆட்சேபம் தெரிவித்த உயரதிகாரிகள் தூக்கியடிக்கப்பட்டதும் நடந்திருக்கிறது. கடந்த வருடம் நாடு எதிர்கொண்ட நிலக்கரி பற்றாக்குறை மற்றும் மின்சக்தி முடக்க அபாயத்தின் பின்னேயும் அதானிக்கு எதிராக விரல்கள் நீண்டது குறிப்பிடத்தக்கது.

பரஸ்பர புரிதல்கள்

அதானி போன்ற வணிக நிறுவனங்கள் பாஜக தலைவர்களை விலைக்கு வாங்கும் சக்தி படைத்தவை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. பாஜக சீனியர்களில் ஒருவரான சத்யபால் மாலிக், மேகலயா கவர்னராக இருந்தபோது ’ஒட்டுமொத்த நாட்டையே அதானிக்கு விற்க முயற்சிப்பதாக’ மோடியை பகிரங்கமாக வாரினார். இதன் உச்சமாக மோடி - அமித் ஷா ஆகியோரின் பினாமியே கௌதம் அதானி என கொளுத்திப்போடுவோரும் உண்டு.

மோடி - அதானி இடையிலான விநோத சமன்பாடுகள், இந்த புரளிகளுக்கு தூபமிடவே செய்கின்றன. ஜார்கண்ட் கோடா மின் உற்பத்தி முதல் கேரளத்தின் விழிஞம் துறைமுகம் வரை பரவியிருக்கும் அதானி குழுமம், மோடி ஆசியால் அயல் நாடுகளிலும் காலூன்றி வருகிறது. இலங்கையின் காற்றாலை மின்திட்டத்தை அதானிக்கு அளிக்குமாறு இந்திய பிரதமர் அழுத்தம் கொடுக்கிறார் என்ற புகார் அந்நாட்டில் பகிரங்கமாக வெடித்தது ஓர் உதாரணம்.

மோடிக்கு தனது விசுவாசத்தை பறைசாற்றும் அதானியின் அதிரடிகளுக்கும் பஞ்சமில்லை. நாட்டின் பாரம்பரிய ஊடகங்களில் ஒன்றாக சமரசமற்ற செய்திகளை வழங்கி வந்த என்டிடிவி நிறுவனம், பல தருணங்களில் மோடி அரசை நெளியவைக்கும் செய்திகளை வெளியிட்டது. பதிலடியாக, கொள்ளைப்புறம் வாயிலாக அந்த ஊடக நிறுவனத்தின் கணிசமான பங்குகளை வாங்கி, அதனை தன் வயப்படுத்தும் பணிகளை அண்மையில் சாதித்திருக்கிறது அதானி குழுமம்.

அதானி
அதானி

சீட்டுக்கட்டு அதானி?

அம்பானியுடன் ஒப்பிடுகையில் அதானியின் துரித வளர்ச்சியை, அபாயகரமான வீக்கம் என்று எச்சரிக்கும் குரல்களும் உண்டு. அதானி குழுமத்தின் ரூ.2 லட்சம் கோடி கடனை சுட்டிக்காட்டி அவ்வப்போது சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனங்கள் இந்த எச்சரிக்கையை விடுத்தபடி இருக்கின்றன. விஜய் மல்லையா, நீரவ் மோடி வரிசையில் அதானியும் விரைவில் சேர்வார் என்று பயமுறுத்துவோரும் உண்டு. ஆனால், அதானி குழுமம் எளிதில் சரியும் சீட்டுக்கட்டு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது புதிய துறைகளை ஆக்கிரமித்து வெற்றிநடையை நிரூபித்து வருகிறது.

அண்மையில் அப்படி அதானி பிரவேசித்த துறை பாதுகாப்பு படைக்கலன் சார்ந்தது. பாதுகாப்பு துறையில் தனியார் பிரவேசிப்பதற்கு எதிராக பலதரப்பிலும் கூக்குரல்கள் எழுந்த போதும், ஆள்வோரின் ஆசியோடு அத்துறையிலும் சாதனை படைக்கத் துடிக்கிறார் அதானி. தாஜ் ஹோட்டலில் தன்னை துரத்திய துப்பாக்கி தோட்டாவை மறக்காத அதானி, நவீன துப்பாக்கிகள், தோட்டாக்கள் தொடங்கி ஏவுகணைகள் வரை தயாரிக்க இருக்கிறார். அதில் பொதிந்த மர்மமும், விறுவிறுப்பும் வருங்காலத்திலும் அதானியைத் தொட்டுத் தொடரவிருக்கின்றன!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in