‘பற்றாக்குறையைச் சமாளிப்பதா, ஏற்றுமதியைத் தொடர்வதா?’ - கோதுமை விஷயத்தில் குழப்பத்தில் மோடி அரசு

‘பற்றாக்குறையைச் சமாளிப்பதா, ஏற்றுமதியைத் தொடர்வதா?’ - கோதுமை விஷயத்தில் குழப்பத்தில் மோடி அரசு

“உலகம் கோதுமைப் பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்தியாவின் விவசாயிகள் உலகத்துக்கு உணவளிக்க உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்” - மூன்று நாள் பயணமாக சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி ஜெர்மனியில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் ஆற்றிய உரையில் பேசிய வார்த்தைகள் இவை. “எப்போதெல்லாம் மனிதகுலம் நெருக்கடியைச் சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் இந்தியா ஒரு தீர்வை முன்வைக்கிறது” என்றும் பெருமிதத்துடன் அவர் பேசினார். ஆனால், அந்தப் பெருமிதம் நீடிக்குமா எனும் கேள்வி எழுந்திருக்கிறது.

உலகத் தலைவராகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முயற்சியில் இருக்கும் மோடி, கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பல்வேறு நாடுகளுக்குத் தடுப்பூசிகளை வழங்கியது, உக்ரைன் போர் நெருக்கடி காரணமாக கோதுமை இறக்குமதியில் சவால்களைச் சந்திக்கும் நாடுகளுக்கு கோதுமையை அனுப்புவது எனத் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார்.

உக்ரைன் போர் கருங்கடல் பகுதியில் சரக்குக் கப்பல்கள் செல்வது பெருமளவு தடைபட்டிருக்கிறது. கருங்கடல் பகுதி வழியாகத்தான் உலகின் கோதுமை வர்த்தகத்தில் கால் பங்கு நடைபெற்றுவருகிறது. இதனால், ஏற்பட்டிருக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.

கோதுமையை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடான எகிப்து, சமீபகாலமாக கோதுமை இறக்குமதியில் தங்களுக்கு இந்தியாதான் முக்கிய ஆதாரமாக இருக்கிறது எனக் கூறியிருந்தது. 2021-22-ல், 7.2 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்த இந்தியா, இந்த ஆண்டில் இதுவரை 15 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்திருக்கிறது. இதையடுத்து, கோதுமை ஏற்றுமதியில் நிரந்தர நாடாக இந்திய உருவெடுக்கும் என உணவு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த மாதம் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

எனினும், கடந்த சில மாதங்களாக இந்தியாவில் வெப்ப அலைகள் கடும் பாதிப்பை ஏற்படுத்திவருகின்றன. குறிப்பாக, மார்ச் மாதம் வெப்ப அலைகள் மிகக் கடுமையாக இருந்ததால் அதிக அளவிலான கோதுமை வயல்கள் வெய்யிலில் வாடிக் கருகின. இந்த ஆண்டின் மார்ச் மாதம்தான், இந்தியா எதிர்கொண்ட கடும் வெப்பம் கொண்ட மார்ச் மாதம் எனக் கருதப்படுகிறது. இந்தச் சூழலில், இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் கோதுமைப் பற்றாக்குறை உள்நாட்டிலேயே சவால்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, கோதுமை ஏற்றுமதியைக் குறைத்துக்கொள்ளும் சூழல் இந்தியாவுக்கு ஏற்பட்டிருப்பதாக ‘ப்ளூம்பெர்க் நியூஸ்’ ஊடகம் தெரிவித்திருக்கிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வருவதற்கு, பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவை முக்கியக் காரணங்கள். தற்போது மோடி ஆட்சியிலும் பணவீக்கம் அதிகரித்துவருவதாகச் செய்திகள் வெளியாகின்றன. இந்நிலையில், உலகத் தலைவர் எனும் இடத்தை அடைய முயற்சி செய்வதைவிடவும், உள்நாட்டில் ஏற்பட்டிருக்கும் கோதுமைப் பற்றாக்குறையையும் பணவீக்கத்தைச் சரிசெய்வது மோடிக்கு முக்கிய சவாலாக எழுந்திருக்கிறது என்றும் ‘ப்ளூம்பெர்க் நியூஸ்’ தெரிவித்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in