ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்: மணமகளின் வீட்டுக்கு 28 கி.மீ தூரம் நடந்தே சென்ற மணமகன்!

திருமணம்
திருமணம்ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்: மணமகளின் வீட்டுக்கு 28 கி.மீ தூரம் நடந்தே சென்ற மணமகன்!

ஒடிசாவின் ராயகடா பகுதியில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, வாகனம் எதுவும் கிடைக்காத காரணத்தால் மணமகளின் வீட்டிற்கு 28 கிலோமீட்டர் தூரம் மணமகன் நடந்து சென்று திருமணம் செய்துள்ளார்.

ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தின் கல்யாண்சிங்பூர் அருகே உள்ள சுனகண்டி பஞ்சாயத்தைச் சேர்ந்த 22 வயது மணமகன் நரேஷ் பிரஸ்கா, திபலபாடு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை வியாழக்கிழமை திருமணம் செய்யவிருந்தார். ஆனால் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, நரேஷ் குடும்பத்தினருக்கு வாகனம் எதுவும் கிடைக்கவில்லை.

இதனால் சுனகண்டியிலிருந்து வியாழக்கிழமை இரவு முழுவதும் மணமகன், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உட்பட பலரும் 28 கி.மீ தூரம் நடந்து சென்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மணப்பெண்ணின் ஊருக்குச் சென்றனர். அதன்பின்னர் வெள்ளிக்கிழமை காலை இந்த மணமக்களுக்குத் திருமணம் நடைபெற்றது. மணமகன் மணமகள் வீட்டிற்கு நடந்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒடிசாவில் இன்சூரன்ஸ், ஓய்வூதியம், நல வாரியம் அமைத்தல் போன்ற சமூக நலத்திட்டங்களை வலியுறுத்தி புதன்கிழமை முதல் மாநிலம் முழுவதும் ஓட்டுநர் சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது. அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று மாநில அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.

இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், பள்ளிகள், அலுவலகங்களுக்குச் செல்லும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது, சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in