
இன்று நிச்சயதார்த்தம் நடப்பதாக இருந்த நிலையில், சாலை விபத்தில் சிக்கி சிகிச்சையில் இருந்த மாப்பிள்ளை நேற்று இரவு பரிதாபமாக உயிர் இழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், கோடியூர் காடுவெட்டி பகுதியைச் சேர்ந்தவர் அனுராஜ்(26) பொறியாளராக இருந்தார். குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரமாண்டமான குடில் அமைக்கப்படுவது வழக்கம். இவர் தன் நண்பர்களுடன் கடந்த 23-ம் தேதி கிறிஸ்துமஸ் குடில் பார்க்கச் சென்றார். அப்போது காட்டாத்துறை பகுதியில் இவரது பைக் விபத்தில் சிக்கியது. இதில் படுகாயம் அடைந்த அனுராஜை அவரது நண்பர்கள் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிர் இழந்தார். அனுராஜிற்கு இன்று காலையில் நிச்சயதார்த்தம் நடப்பதாக இருந்தது. அவர் எப்படியும் பரிபூரண குணமடைந்து வந்துவிடுவார் என இருவீட்டாரும் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் அனுராஜ் பரிதாபமாக உயிர் இழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. அனுராஜ் உடல் தானத்திற்கும் விருப்பம் தெரிவித்து இருந்ததால் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட உள்ளதாக அனுராஜின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.