இடுகாட்டை பட்டா போட்டு உழவு செய்த விவசாயி: மூதாட்டியை அடக்கம் செய்ய வந்த பட்டியலின மக்கள் அதிர்ச்சி

இடுகாட்டை பட்டா போட்டு உழவு செய்த விவசாயி: மூதாட்டியை அடக்கம் செய்ய வந்த பட்டியலின மக்கள் அதிர்ச்சி

உசிலம்பட்டி அருகே பட்டியலின மக்கள் இடுகாடாகப் பயன்படுத்தி வந்த இடத்தை தனிநபரின் பட்டா இடம் என்று உழவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இறந்த உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த பட்டியலின மக்களிடம் வருவாய் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சேடபட்டியை அடுத்துள்ளது ஜம்பலப்புரம் கிராமம். இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது தோட்டத்தின் அருகே உள்ள இடத்தை இந்த பட்டியலின மக்கள் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இடுகாடாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பெரியசாமி தனது தோட்டத்து இடத்தை மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்த சூழலில், இடத்தை முறையாக அளவீடு செய்த போது பட்டியலின மக்களின் சுடுகாடும் பட்டா நிலத்திற்குள் வரவே தோட்டம் முழுவதும் உழவு செய்து பயிர் விதைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இருந்த இடுகாட்டை தனிநபர் தனது சொந்த பட்டா இடத்தில் வருவதாக கூறி உழவு செய்த சூழலில், இன்று அதே ஊரைச் சேர்ந்த வேலம்மாள் என்ற மூதாட்டி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில், உடலை அடக்கம் செய்ய இடம் இல்லாமல் தவித்த பட்டியலின மக்கள் சேடபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டியலின மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள், இடுகாடாக பயன்படுத்திய இடத்தின் அருகிலேயே உள்ள புறம்போக்கு இடத்தில் தற்போதைக்கு, இறந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்யுமாறு கூறினர். மேலும், விரைவில் இடுகாட்டிற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு நிரந்தர இடுகாடு அமைத்துத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in