புதைகுழிகளாகும் மதுரை சாலைகள்: பள்ளத்தில் புதைந்த லாரியை மீட்க சென்ற ஜேசிபியும் சிக்கியது

மதுரை மாநகர் சாலையில் புதைந்த ஜேசிபி
மதுரை மாநகர் சாலையில் புதைந்த ஜேசிபிபுதைகுழிகளாகும் மதுரை சாலைகள்: பள்ளத்தில் புதைந்த லாரியை மீட்க சென்ற ஜேசிபியும் சிக்கியது

பாதாளச் சாக்கடை, பெரியாறு கூட்டுக்குடிநீர்திட்டம் மற்றும் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடக்கும் மதுரை மாநகராட்சி சாலைகளில் வாகனங்களின் சக்கரங்கள் அடிக்கடி புதைந்து விடுகின்றன. அவற்றை மீட்கச் செல்லும் ஜேசிபி இயந்திரங்களும் குழிகளில் சிக்கிக் கொள்ளும் அவலம் தொடர்கிறது.

மதுரை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட புறநகர் 29 வார்டுகளில் பாதாளச் சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. அத்துடன் ஒட்டுமொத்தமாக 100 வார்டுகளில் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளும், மாநகராட்சி பணிகளால் சேதமடைந்த சாலைகளுக்கு பதிலாக புதிய சாலைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இப்பணிகளால் மாநகராட்சி சாலைகள் பெரும்பாலும் மேடு பள்ளமாகவும், கற்கள் பெயர்ந்தும் சிதைந்துப்போய் உள்ளன.

பாதாளச் சாக்கடை, பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடந்த குடியிருப்பு சாலைகளில் தோண்டிய குழிகளை, ஒப்பந்த நிறுவனத் தொழிலாளர்கள் முழுமையாக மூடாமல் சென்று விடுகின்றனர். அதனால், மழை பெய்யும்போது சரியாக மூடாமல் விடப்பட்ட குழிகள் சாலைகளில் புதைக்குழிகள் போல் காணப்படுகின்றன. மழை பெய்யும் நேரத்தில் சாலைகளில் தண்ணீர் நிரம்பி நிற்கும்போது வாகனங்கள் இந்த பள்ளங்களில் பதித்தும், புதைந்தும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் கால்கள் மூழ்கி சேறும், சகதியுமாகிவிடுகின்றன.

அத்துடன் சாலைகளில் பெய்யும் மழைநீர் வழிந்தோட வழியில்லாமல் தெப்பம்போல் தேங்கி நிற்கிறது. அதனால், தற்போது மழைக்காலத்தில் மதுரை சாலைகளில் பயணிப்பது ஆபத்தாக உள்ளது. தற்போது மழை பெய்யாத நிலையிலும் வாகனங்கள் அடிக்கடி பள்ளங்கள், குழிகள் தோண்டிய இடங்களில் புதைந்துவிடுகின்றன.

சாலைப்பள்ளத்தில் சிக்கிக் கொண்ட லாரி
சாலைப்பள்ளத்தில் சிக்கிக் கொண்ட லாரிபுதைகுழிகளாகும் மதுரை சாலைகள்: பள்ளத்தில் புதைந்த லாரியை மீட்க சென்ற ஜேசிபியும் சிக்கியது

இந்த நிலையில் மதுரை கே.கே.வண்டியூர் சுந்தரம் பார்க் சாலையில் பாதாளச் சாக்கடை பணியில் தோண்டிய மண்ணை எடுக்க வந்த லாரி, சாலையில் நேற்று பதித்துவிட்டது. டிரைவர் போராடியும் லாரியை மீட்க முடியவில்லை. ஏற்கெனவே இந்த இரு வழிச்சாலையில் பாதாளச் சாக்கடை பணியால் ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஒரு வழியில் மட்டுமே வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் லாரி மண்ணில் புதைந்தும் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜேபிசியைக் கொண்டு வந்து மண்ணில் புதைந்த லாரியை மீட்க போராடினார். ஆனால், மீட்க வந்த ஜேசிபியும் பள்ளத்தில் புதைந்தது. அதன்பின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மற்ற ஜேசிபிகளைக் கொண்டு வந்து இரு வாகனங்களையும் மீட்டனர்.

இதுபோல்தான் அடிக்கடி மாநகராட்சி குடிநீர் லாரிகள், குப்பை அள்ளும் லாரிகள், பொதுமக்களின் கார்கள், மாநகராட்சி பணிகள் நடக்கும் சாலைகளில் புதைந்து அதனை எடுப்பதற்குள் பெரும் போராட்டமாகி விடுகிறது. அதனால், ஒப்பந்தம் நிறுவனம் தொழிலாளர்கள், குழாய் பதிக்க தோண்டிய குழிகளை முறையாக மூடி ஜேசிபியைக் கொண்டு சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இப்படி செய்தால் மட்டுமே மழைக்காலத்திலும், வெயில் காலத்திலும் மக்கள் சாலையில் பயமில்லாமல் சென்று வர முடியும் என்றும் கூறியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in