காந்தியுடன் மீரா பென் (வலது ஓரம்)
காந்தியுடன் மீரா பென் (வலது ஓரம்)

‘காந்தியின் சீடர் மீரா பென் எழுதிய நூலை இந்தியில் மொழிபெயர்க்க அனுமதிக்க வேண்டும்!’

மகாத்மா காந்தியின் சீடர் மீரா பென் எழுதிய ‘தி ஸ்பிரிட்ஸ் பில்கிரிமேஜ்’ எனும் ஆங்கில நூலை இந்தியில் மொழிபெயர்க்க அனுமதி வழங்க வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

மீரா பென் என அழைக்கப்படும் மெட்லீன் ஸ்லேடு, பிரிட்டனைச் சேர்ந்தவர். காந்தி தொடர்பான தகவல்களால் அவர் மீது மிகுந்த பற்று கொண்ட மெட்லீன் ஸ்லேடு, காந்தியின் சாபர்மதி ஆசிரமத்தில் சேர்ந்து அவரது சீடராக மாறினார். அதன் பின்னர் அவர் மீரா பென் என அழைக்கப்பட்டார். 1960-ல் அவர் எழுதிய ‘தி ஸ்பிரிட்ஸ் பில்கிரிமேஜ்’ இந்தியாவில், காந்தியின் சீடராக அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. 1982-ல் அவர் காலமானார். இதற்கிடையே, அந்த நூலின் சுருக்கப்பட்ட பதிப்பு மராத்தி மொழியில் வெளியானது.

காந்தியுடன் மீரா பென்
காந்தியுடன் மீரா பென்

இந்நிலையில், காப்புரிமை சட்டத்தின்கீழ் அந்த நூலை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று பேலாப்பூரைச் சேர்ந்த அனில் கர்கானிஸ் என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.

அதில், ‘மெட்லீன் ஸ்லேடு எழுதிய நூல், 1960-ல் ஓரியன்ட் லாங்மேன் பிரைவேட் லிமிட்டட் எனும் நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்டது. பிரிட்டனில் லாங்மேன்ஸ், கிரீன் அண்ட் கோ நிறுவனம் அந்நூலைப் பதிப்பித்தது. 1982 ஜூலை 20-ல் மெட்லீன் ஸ்லேடு காலமானார். அந்தப் புத்தகம் 1960-ல் இந்தியாவில் பதிப்பிக்கப்பட்ட்டது என்பதால், காப்புரிமைச் சட்டப்படி அதை மொழிபெயர்ப்பதற்கான விதிமுறைகள் பூர்த்தியாகின்றன’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

‘ஆங்கில நூலின் பதிப்பாளர்கள் தற்போது உயிருடன் இல்லை. இதன் சுருக்கப்பட்ட வடிவம் ரங்கா மராத்தே என்பவரால் மராத்தியில் மொழிபெயர்க்கப்பட்டு கிர்லோஸ்கர் பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டது. அவர்களும் தற்போது உயிருடன் இல்லை. எனவேதான் இந்த மனுவைத் தாக்கல் செய்கிறோம். இதில் வணிக நோக்கம் எதுவும் இல்லை. அந்த நூல் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டும் என்பதுதான் மனுதாரரின் விருப்பம்’ என அனில் கர்கானிஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி மணீஷ் பிதாலே, இதுதொடர்பாக ஒரு பொது அறிக்கையை வெளியிடுமாறு காப்புரிமைப் பதிவாளருக்கு உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பாக, ஒரு அறிக்கையை ‘ஃப்ரீ ப்ரெஸ் ஜர்னல்’ எனும் ஆங்கில நாளிதழிலும், ‘லோக்சத்தா ’எனும் மராத்தி நாளிதழிலும் வெளியிடுமாறு மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, மறுவிசாரணையை 2023 பிப்ரவரி 15-க்குத் தள்ளிவைத்தார்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in