திராவிடர், ஆரியர் என்று பிரித்தவர்கள் ஆங்கிலேயர்கள்: பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி

திராவிடர், ஆரியர் என்று பிரித்தவர்கள் ஆங்கிலேயர்கள்: பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ஆங்கிலேயர்கள், தெற்கே இருந்தவர்களைத் திராவிடர் என்றும், வடக்கே இருந்தவர்களை ஆரியர் என்றும் பிரித்ததாக கூறினார்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, "வட அமெரிக்காவை சிதைத்தது போல இந்தியாவைச் சிதைக்க ஆங்கிலேய காலனி ஆதிக்கம் திட்டமிட்டபோது அவர்களால் அதை சாதிக்க முடியவில்லை. ஏனெனில் இந்தியா சீனாவை விட சமூக, பொருளாதார அளவில் மேம்பட்டு இருந்தது. இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்க ஆங்கிலேயர்கள் முயற்சி செய்தார்கள்.

தெற்கே இருந்தவர் திராவிடர் என்றும், வடக்கே இருந்தவர் ஆரியர் என்றும் பிரித்தனர். ஆங்கிலேயர்கள் எவ்வாறு இந்திய வரலாற்றை மாற்றினார்கள் என்பதை அனைவரும் தேடித் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் தான் கப்பல்களை வாட்டர்ப்ரூஃப் செய்வது குறித்து ஆங்கிலேயர்கள் கண்டுகொண்டனர். சோழர்களின் கப்பல் பயன்பாட்டு முறை வழியாகவே, ஆங்கிலேயர்கள் கப்பல் கட்டுமானத்தில் முன்னேற்றம் அடைந்தனர்.

காமராஜர் சிறந்த தேசியவாதி. கிராமப் பகுதியில் இருந்து வந்து பாரத் ரத்னா பெரும் அளவுக்கு உயர்ந்தவர். எல்லோருக்கும் முன்மாதிரியாக திகழ்பவர். ஜாலியன் வாலபாக் படுகொலை சம்பவத்தைப் பார்த்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். தமிழக கல்வி கட்டமைப்பு, தொழிற்சாலைகள், சென்னை ஐஐடி உள்ளிட்டவற்றை உருவாக்கியவர். அவரை நினைத்து பெருமை கொள்கிறேன்.

இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளது. அப்போது, புதிய சாதனைகளைப் படைக்க நாம் உழைக்க வேண்டும். புதிய இந்தியாவை இளைஞர்கள் தான் உருவாக்க வேண்டும். நாடு வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. இன்று ஆண்களை விட பெண்கள் அதிகமாக பட்டம் பெற்றுள்ளனர். இந்தியாவை ஒரே குடும்பமாக பார்க்க வேண்டும். பல பிரிவுகளாகப் பார்க்கக் கூடாது. 8 ஆண்டுகளில் பல்வேறு தளங்களிலும், துறைகளிலும் இந்தியா முன்னேறி உள்ளது" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in