தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஆளுநர் ஏற்படுத்துகிறார்: அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் வன்முறையைத் தூண்டும் விதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருவதாக அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் டி.கே. சத்யசீலன் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ”அரசியல் அமைப்பு சட்டத்தை கொண்டுவந்த அண்ணல் அம்பேத்கரின் பெயரைக் கூட உச்சரிக்க ஆளுநர் மறுப்பது,  வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதனால் அவரைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். ஆளுநர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும்  செயல்பட்டு வருகிறார். ஆளுநர் என்பவர் வெறும் போஸ்ட் மாஸ்டர்தான்.

ஆளுநர் பொது மக்களிடையே தமிழகம் என்ற   வார்த்தையை பயன்படுத்தி  குழப்பத்தை ஏற்படுத்திவருவதை  கண்டித்தும், ஆளுநரின் நடவடிக்கைக்களை கண்டித்தும் தமிழகம் முழுவதும் அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில், போராட்டம் நடத்த உள்ளோம். பொதுநலன் கருதி மட்டுமே ஆளுநர் செயல்பட வேண்டும். ஆளுநர் பாஜகவின் ஊதுகோலாக இருக்கிறார். அவர் பொதுமக்களின் பிரதிநிதியாக இருக்க வேண்டுமே தவிர ஒருதலைபட்சமாக செயல்படக்கூடாது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தலின்போது முறைகேடு நடந்துள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.தேர்தலின்போது சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ”என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in