ஓடும் பேருந்தில் அரசு நடத்துனர், ஓட்டுநர் மீது கொடூரத் தாக்குதல்: ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் ஸ்தம்பித்தது திருவாரூர்!

ஓடும் பேருந்தில் அரசு நடத்துனர், ஓட்டுநர் மீது கொடூரத் தாக்குதல்: ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் ஸ்தம்பித்தது திருவாரூர்!

திருவாரூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து முகூர்த்த தினமான இன்று திருவாரூர் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

கடந்த 7-ம் தேதியன்று நாகையிலிருந்து திருவாரூர் வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை பெருங்கடம்பனூர் என்ற இடத்தில் இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு இளைஞர்கள் இடைமறித்து தகராறு செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் பேருந்து நடத்துனரையும் ஓட்டுநரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பாதிப்புக்குள்ளான ஓட்டுநர் மற்றும் நடத்துனர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து கழக ஊழியர்களை தாக்கிய நான்கு பேரில் ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். அதனால் மீதம் உள்ளவர்களையும் கைது செய்ய வேண்டும், அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவாரூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை ச் சேர்ந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் 150 பேர் இன்று காலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் முகூர்த்த தினமான இன்று திருமணத்திற்கு செல்வதற்காக பேருந்துகளை எதிர்பார்த்திருந்த பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள். காலை முதலே திருவாரூர் பணிமனையில் இருந்து இயக்கப்படும் 70 பேருந்துகளும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நாகை அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் நேரில் வந்து போக்குவரத்து கழக ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அளித்த உத்தரவாதத்தை அடுத்து தங்கள் வேலை நிறுத்தத்தை முடித்துக் கொண்டு பணிக்கு திரும்பினார்கள். அதன் பின்னர் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு போக்குவரத்து திரும்பியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in