அடியோடு மாறிப்போன அரசுப் பள்ளி!

சாதித்துக்காட்டிய பள்ளி மேலாண்மைக் குழு
வண்டியூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி மாணவர்கள்
வண்டியூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி மாணவர்கள்

மதுரையிலிருந்து வண்டியூர் செல்லும் சாலையில் இருக்கும் அந்தப் பள்ளிக்கூடத்தை யாராவது ஊருக்குப் புதியவர்கள் பார்த்தால், “இது பிரைவேட் ஸ்கூல் தானே?” என்று தான் ஆச்சரியத்துடன் கேட்பார்கள். அத்தனை மெருகுடன் அழகாய் பளிச்சிடுகிறது மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான அந்த தொடக்கப்பள்ளி!

சுதந்திரத்திற்கு முன்பு 1918-ல் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி இப்போது வயது நூறைக் கடந்துவிட்டது. ஆனாலும் இன்றைக்கு எழுப்பியதைப் போல் எழிலாக காட்சி தருவதற்குக் காரணம் இங்குள்ள ஆசிரியர்களும் பள்ளி மேலாண்மைக் குழுவினரும் தான்.

முன்பு இந்தப் பள்ளியும் அரசுப் பள்ளிகளுக்கே உரிய அக்மார்க் இலக்கணத்துடன்தான் இருந்தது. அதனால் இங்கு ஆண்டுக்கு 250 மாணவர்களை தக்கவைப்பதே பெரும்பாடாக இருந்தது. “ஒழுங்கான கட்டிடம்கூட இல்ல... இப்படி இருந்தா எங்க புள்ளைங்கள எப்படி அனுப்புறது?” என்று சொல்லியே தங்கள் பிள்ளைகளை இங்கு அனுப்பாமல் அக்கம் பக்கத்து தனியார் பள்ளிகளுக்கு அனுப்பினார்கள் மக்கள். அதனால், இங்குள்ள ஆசிரியர்கள் ஏற்கெனவே இங்கு படிக்கும் பிள்ளைகளைத் நிறுத்திவைக்கவே நித்தமும் பட்டார்கள்.

முன்பு பள்ளியின் நிலை...
முன்பு பள்ளியின் நிலை...
புனரமைக்கப்பட்ட பிறகு...
புனரமைக்கப்பட்ட பிறகு...

இந்த நிலையில் தான் மூன்று மாதங்களுக்கு முன்பாக ஹெலன் தெரசா இங்கே தலைமை ஆசிரியராக வந்தார். வந்ததுமே மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பது குறித்து கவலைப்பட்ட தெரசா, பள்ளிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் கவனத்தைத் திருப்பினார். முதல்கட்டமாக, பள்ளிக் கட்டிடத்தின் பழுதான பகுதிகளை சீரமைத்து சுவர்களுக்கு கண்ணுக்குக் குளிர்ச்சியாக வண்ணம் தீட்டினார். அதனைத் தொடர்ந்து, ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் பங்களிப்பில் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து சேர்ந்தன.

ஸ்மார்ட் வகுப்பறை...
ஸ்மார்ட் வகுப்பறை...

இந்தப் பள்ளியின் வியத்தகு வளர்ச்சி குறித்து தலைமை ஆசிரியர் ஹெலன் தெரசாவிடம் பேசினோம், "மாநகராட்சிப் பள்ளியாக இருந்தாலும் அனைத்துக்கும் அரசை எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் நாங்களே முன்னெடுத்து சில வேலைகளைச் செய்து பள்ளியை புனரமைக்க முடிவெடுத்தோம். அதற்கு முதல்வேலையாக பள்ளி மேலாண்மைக் குழுவை பலப்படுத்தினோம்.

மேலாண்மைக் குழுவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரையும் சேர்த்தோம். பள்ளிக் கட்டிடத்தைப் புதுப்பிக்க அரசு மானியமாக 35 ஆயிரம் ரூபாய் ஃபண்ட் கிடைத்தது. மேலாண்மைக் குழுவினரின் பங்களிப்பில் மேலும் ஒரு லட்ச ரூபாய் திரட்டி பள்ளியைப் புனரமைத்தோம். இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரான பாலுச்சாமி ஏட்டய்யா, இந்த விஷயத்தில் எங்களுக்குப் பேருதவி செய்தார்.

பள்ளி மேலாண்மை குழுவினர்...
பள்ளி மேலாண்மை குழுவினர்...

பள்ளியில் கழிப்பறை சரியாக இல்லை என்பதும் அநேகம் பேரின் குறையாக இருந்தது. அதனால் அடுத்த பிரையாரிட்டி கழிப்பறைக்குக் கொடுத்தோம். இந்த விஷயத்தில், பெற்றோர்கள் பலரும் தாங்களாக முன்வந்து ஒவ்வொரு பொறுப்பை எடுத்துக் கொண்டார்கள். ஒருவர்ர், கழிப்பறைகளுக்கு டைல்ஸ் ஒட்டும் பொறுப்பை எடுத்துக் கொண்டார். இன்னொருவர், வகுப்பறைக் கெல்லாம் லைட், ஃபேன் போட்டுத் தந்தார். இன்னொருவர், மாணவர்களுக்கான இருக்கை வசதிக்கு பொறுப்பெற்றார். தான் படிச்ச பள்ளி என்பதால் பாலுச்சாமி ஏட்டய்யா ஒன்றே முக்கால் லட்ச ரூபாய்க்கான வேலைகளை செய்து கொடுத்தார். இப்படித்தான் ஒவ்வொரு வேலையாக செய்து முடித்து இன்றைக்கு இந்த நிலைக்கு இந்தப் பள்ளிக்கூடத்தை கொண்டு வந்திருக்கிறோம். இன்னும் இந்தப் பள்ளியை எந்தெந்த வழிகளில் மேம்படுத்தலாம் என சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம்” என்றார் சாதிச்ச திருப்தியுடன்.

பள்ளியில் பட்டமளிப்பு நிகழ்ச்சி...
பள்ளியில் பட்டமளிப்பு நிகழ்ச்சி...

பள்ளியை பளிச் ஆக்கியதுடன் நின்றுவிடாமல் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இன்னும் சில பல வேலைகளையும் இங்குள்ள ஆசிரியர்களும் மேலாண்மைக் குழுவினரும் செய்திருக்கிறார்கள். எவ்வித கட்டணமும் இல்லாமல் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகளைப் பட்டியலிட்டு, ‘நோ ஃபீஸ்... மோர் கெயின்’ என்ற தலைப்புடன் வண்டியூரைச் சுற்றிலும் பல இடங்களில் ஃபிளெக்ஸ் பேனர்களை வைத்திருக்கிறார்கள்.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக கற்பித்தல் மற்றும் கற்றல் திறனையும் அதிகரிக்க தன்னார்வலர்களின் உதவியுடன் ஸ்மார்ட் வகுப்பறைகளையும் உருவாக்கி இருக்கிறார்கள் இப்பள்ளி ஆசிரியர்கள். இதன் மூலம் பவர் பாயின்ட் சிஸ்டத்தில் இங்கே மாணவர்கள் படிக்கிறார்கள். மாணவர்களின் கம்யூனிகேஷன் ஸ்கில்லை வளர்ப்பதற்காக ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

இங்கு வந்த பெற்றோர்களில் சிலர், “இங்கே எல்கேஜி வகுப்பு இல்லாததால் எங்களின் இன்னொரு பிள்ளையை நாங்கள் தனியார் பள்ளிக்கு அனுப்ப வேண்டி இருக்கிறது” என்று குறைபட்டுக் கொண்டார்களாம். அந்தக் குறையையும் போக்கிய ஆசிரியர்கள், இந்தப் பள்ளி வளாகத்திலேயே எல்கேஜி வகுப்புகளையும் தங்கள் சொந்த முயற்சியில் தொடங்கி இருக்கிறார்கள். எல்கேஜி வகுப்பைக் கவனித்துக் கொள்ள தாங்களே ஒரு ஆசிரியரை நியமித்து அவருக்கு தங்கள் செலவில் சம்பளமும் கொடுத்து வருகிறார்கள் இங்குள்ள ஆசிரியர்கள். இப்போது இங்குள்ள எல்கேஜி வகுப்பில் சுமார் 60 பிள்ளைகள் படிக்கிறார்கள்.

ஃபிளெக்ஸ் பேனர்...
ஃபிளெக்ஸ் பேனர்...
பள்ளியின் முகப்பு...
பள்ளியின் முகப்பு...

இத்தனையையும் நமக்கு எடுத்துச் சொன்ன தலைமை ஆசிரியை ஹெலன் தெரசா நிறைவாக, "இத்தனை முயற்சிகள் எடுத்து இப்போது இந்தப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை 461ஆக உயர்த்தி இருக்கிறோம். இந்த ஆண்டு மட்டுமே 128 மாணவர்களைப் புதிதாகச் சேர்த்திருக்கிறோம். ஆசிரியர்கள் மட்டுமல்லாது பெற்றோரும் தன்னார்வலர்களும் சேர்ந்து மெனக்கிட்டதால் தான் இந்த நிலையை எட்ட முடிந்திருக்கிறது. இன்னும் எங்கள் பள்ளி வளரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அரசுப் பள்ளிகள் அவலட்சணமாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் தான் பெரும்பாலான மக்கள் இன்னமும் இருக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. அரசுப் பள்ளிகள் எவ்வளவோ மாறிவிட்டன. அரசுப் பள்ளி மாணவர்கள் எல்லாம் சாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எனவே, அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கை வைத்து பிள்ளைகளை அங்கே படிக்க அனுப்புங்கள் என்பதே எனது வேண்டுகோள்” என்று முடித்தார்.

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ற இடவசதி இல்லாமல் தடுமாறி வருகிறது இந்தப் பள்ளி. அதனால் இங்குள்ள பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கூடுதல் பள்ளிக் கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று மேலாண்மைக் குழு தரப்பில் மதுரை மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்களாம்.

மதுரை மாநகராட்சி நிர்வாகம் கனிவுடன் பரிசீலிக்கட்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in