அடுத்தடுத்து நகராட்சி அலுவலர்கள் வீடுகளில் கொள்ளை முயற்சி: ஆணையாளர் சஸ்பெண்ட் ஆன நிலையில் ஆவணங்கள் திருட முயற்சியா?

அடுத்தடுத்து நகராட்சி அலுவலர்கள் வீடுகளில் கொள்ளை முயற்சி: ஆணையாளர் சஸ்பெண்ட் ஆன நிலையில் ஆவணங்கள் திருட முயற்சியா?

சிவகங்கையில் நகராட்சி பொறியாளரின் வீடு உட்பட அடுத்தடுத்த இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்ற நிலையில், நகராட்சி சம்பந்தமான முக்கிய ஆவணங்களை திருட நடைபெற்ற முயற்சியா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருபவர் பாண்டீஸ்வரி. இவரது சொந்த ஊர் பரமக்குடி என்பதால் சிவகங்கை செந்தமிழ் நகர் பகுதியில் மாடி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி, தினசரி அலுவலகம் சென்று வருகிறார். இந்நிலையில், நேற்று அவர் தனது சொந்த ஊர் சென்றுவிட்டு, இன்று காலை வீடு திரும்பி உள்ளார். அப்போது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போன்று, அருகில் உள்ள நகராட்சி மின்வாரிய பொறியாளர் பாலசுப்ரமணியனின் காலியாக உள்ள வீட்டின் பூட்டையும் மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையடிக்க முயன்றது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இரண்டு வீட்டிலும் நகை பணம் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நகராட்சி ஆணையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், நகராட்சி அலுவலகத்தில் கரோனா காலத்தில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்தனர். இந்நிலையில், நகராட்சி அலுவலர்கள் வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்திருப்பது ஏதேனும் ஆவணங்களை எடுப்பதற்காக முயற்சி நடந்திருக்கலாம் என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in