இந்தியாவில் இது புதுசு!: பாஸ்மதி அரிசியின் பாரம்பரியம் காக்க முடிவு

இந்தியாவில் இது புதுசு!: பாஸ்மதி அரிசியின் பாரம்பரியம் காக்க முடிவு

இந்தியாவின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றான பாஸ்மதி அரிசியின் பெருமையை காக்க மத்திய அரசு புதிய நடவடிக்கையை அமல்படுத்த உள்ளது. அதன்படி பாஸ்மதி அரிசிக்கே உரிய இயற்கையான மணம் மற்றும் சுவையை பராமரிக்கும் தர நிர்ணய கட்டுப்பாடுகள் அறிமுகமாக இருக்கின்றன. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா இன்று இதனை அறிவித்துள்ளார்.

சிறப்பான பிரியாணி முதல் சாதாரண கலவை சாதம் வரை பாஸ்மதி அரிசியில் தயாரிக்கும்போது, அதன் உணவுக்கே தனி அடையாளம் சேர்ந்து விடுகிறது. பாஸ்மதி அரிசி என்பது இந்தியாவின் தனிப்பெரும் சிறப்புகளில் ஒன்று. உலகளவில் பாஸ்மதி அரிசியை அதிகம் உற்பத்தி நாடுகளில் முதன்மை வகிக்கிறது இந்தியா. அடுத்த இடங்களில் அண்டை தேசங்களான பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்றவை வருகின்றன.

இவற்றின் மத்தியில் அண்மைக்காலமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான பாஸ்மதி அரிசியின் தரத்தில் கடும் போட்டி நிலவுகிறது. இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியை பாகிஸ்தான் நெருக்கி வருகிறது. இந்தியாவின் பாஸ்மதி உற்பத்தியாளர்கள் மத்தியில் லாபமீட்டுவதற்காக, பாஸ்மதியை ஒத்த கலப்பு அரிசிகளை சேர்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் சர்வதேச சந்தையில் இந்தியாவின் பெயர் அடிபட்டு வருகிறது.

பாஸ்மதி என்றாலே நறுமணம் என்பது பொருளாகும். பாஸ்மதி அரிசிக்கு அதன் நறுமணமே சிறப்பான தரத்துக்கான குறியீடாகும். ஆனால் செயற்கை மணமூட்டிகளை சேர்ப்பதும், பாலீஷ் செய்வதும் தற்போது அதிகரித்து வருகிறது. இவற்று முடிவுகட்டி இந்தியாவின் தனிச்சிறப்பான பாஸ்மதியின் பெருமை மற்றும் பவித்திரம் காக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுவ் மாண்டவியா இன்று வெளியிட்டு அறிவிப்பு ஒன்றில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் விதிக்கும் புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுபாடுகளுக்கு பாஸ்மதி அரிசி ஆளாகிறது. இதன்படி, செயற்கை மணமூட்டிகள் மற்றும் நிறமூட்டிகள் எதையும் பாஸ்மதி அரிசியில் சேர்க்கக்கூடாது. இவை மட்டுமன்றி உணவு தர நிர்ணத்துக்கான இதர மதிப்பீடுகள் அனைத்துக்கும் பாஸ்மதி ஆளாகிறது.

இவற்றின் மூலம் சந்தையில் இந்தியாவின் பாரம்பரிய மிக்க பாஸ்மதி அரிசி மீண்டும் கிடைக்கும் என நம்பலாம். இந்த புதிய ஏற்பாடுகள் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வர இருக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in