இஎஸ்ஐ மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர் குத்திக்கொலை: கன்னியாகுமரியில் பயங்கரம்

இஎஸ்ஐ மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர் குத்திக்கொலை: கன்னியாகுமரியில் பயங்கரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து சற்று முன்பு ஊழியர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள் புரத்தில் அரசு இஎஸ்ஐ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று மாலை புகுந்த மர்மக் கும்பல் ஒன்று பணியில் இருந்த ஊழியர் ரெதீஸ் என்பவரைக் குத்திக் கொலை செய்தது. தொடர்ந்து கண் இமைக்கும் நொடியில் இந்த கும்பல் தப்பியோடியது. உடன் பணியில் இருந்த பணியாளர்களின் கண்முன்பே இந்த கோரச்சம்பவம் அரங்கேறியது.

இந்த கொலை குறித்து தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் மீனா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரெதீஸ்க்கு யாருடனாவது முன்பகை இருந்ததா என்னும் கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அரசு அலுவலகங்களுக்குள் புகுந்த கொலை சம்பவங்களை நிகழ்த்துவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஆனந்த பாண்டி(51) என்னும் மின்வாரிய லைன்மேன் பணியின் போது மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலியிலும் இதேபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in