`அந்த நம்பிக்கையில்தான் இருக்கிறோம்'- முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் கோரிக்கை

`அந்த நம்பிக்கையில்தான் இருக்கிறோம்'- முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் கோரிக்கை

மத்திய அரசு வழங்கிய நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வினை தமிழக அரசு ஊழியர்களுக்கும்,  ஆசிரியர்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்கம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. அன்பரசு மற்றும் பொதுச்செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் இது குறித்து  விடுத்திருக்கும் வேண்டுகோள்  அறிக்கையில், 'ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் பங்கேற்ற தமிழக முதல்வர், நிச்சயமாக உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவோம் என்று உறுதி அளித்தார். உங்கள் குறைகள்  எதுவாக இருந்தாலும் உங்களது துறை அமைச்சரிடம் முறையிடலாம். அவர்கள் நட்போடு அணுகுமுறையை கொண்டிருப்பார்கள். அவர்களிடம் உங்கள் கோரிக்கையை தெரிவித்தால் உறுதியாக என்னுடைய கவனத்திற்கு வரும். அதை தீர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

அந்த நம்பிக்கையுடன்தான் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இருக்கிறார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அகவிலைப்படியை தவிர வேறு எந்த  கோரிக்கையும் நிறைவேற்றப்படாத நிலையில் விலைவாசிப்புள்ளி உயர்வுக்கு ஏற்றாற்போல் மத்திய அரசு எப்பொழுதெல்லாம் ஒன்றிய  அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது. 

எனவே தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியதைப் போன்று அதே தேதியில் நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வை மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும். இது பண்டிகை காலம் என்பதால் தமிழக முதல்வர் முன்னுரிமை அடிப்படையில் அகவிலைப்படி உயர்வை உடனடியாக அறிவித்து வழங்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in