`சுகாதாரத்துறை `துக்ளக் தர்பார்' போல செயல்பட்டு வருகிறது'- மருத்துவர்கள் இடமாற்றத்தால் கொந்தளிக்கும் சங்கம்

அமைச்சர்கள் ஆய்வு
அமைச்சர்கள் ஆய்வு

வேலூர் மாவட்டம்,  பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய மருத்துவ அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசின் உத்தரவிட்டுள்ளதற்கு கண்டனமும் வருத்தமும் தெரிவித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.  ஆய்வுக்கு பிறகு பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டிடங்கள் சரியில்லை, எக்ஸ்ரே எந்திரம் வேலை செய்யவில்லை, பாம்பு கடிக்கு மருந்து இருப்பு இல்லை என்ற காரணங்களை காட்டி அங்கு பணியாற்றிய மருத்துவ அலுவலர்களை  இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்கள். 

இதற்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில், 'வேலூர் சுகாதார மாவட்டம் பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின்  வட்டார மருத்துவ அலுவலரையும் மருத்துவ அலுவலரையும் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டிருப்பதற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தனது வருத்தத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்கிறது. 

எந்தவித விசாரணையும்  இன்றி  மருத்துவர்களை  இடமாற்றம் செய்திருப்பது ஒரு தவறான நடவடிக்கை ஆகும். அண்மைக் காலமாக சுகாதாரத்துறையில் நடந்து வரும் நிர்வாக குளறுபடிகள்,  எந்தவித வரைமுறையுமின்றி துக்ளக் தர்பார் போல நடைபெற்று வருகிறது. இந்த இடமாற்ற சம்பவத்தில் முக்கிய உண்மைகளை தெரியப்படுத்துகிறோம். 

மேம்படுத்தப்பட்ட பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  5 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது மூன்று மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இருப்பினும் மூன்று மருத்துவர்களுடன்  சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.

அங்குள்ள கட்டிடங்கள் 50 வருடங்களுக்கு மேலான கட்டிடங்கள் ஆகும். அந்தக் கட்டிடங்களை புனரமைப்பதற்காகவும் புது கட்டிடங்கள் வேண்டியும் பலமுறை வட்டார மருத்துவ அலுவலரால் துணை இயக்குநருக்கும் பொதுப்பணி துறைக்கும் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது. தற்பொழுது கூட அங்கு பொதுப்பணித்துறை மூலமாக புனரமைப்பு பணி நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் கட்டிடங்கள் பழுதடைந்து இருப்பதற்காக மருத்துவ அலுவலர்களை இடமாற்றம் செய்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

அங்கு  எக்ஸ்ரே உபகரணம் இருந்தாலும் அதனை நிறுவுவதற்கு ஏதுவான கட்டிடம் இல்லாததால்  அதனை உபயோகத்திற்கு கொண்டு வர முடியவில்லை. மேலும் எக்ஸ்ரே உபகரணம் நிறுவுவதற்கு முறையான கட்டிடம் வேண்டி வட்டார மருத்துவ அலுவலரால் துணை இயக்குநருக்கும் பொதுப்பணித் துறைக்கும் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன.

பாம்பு கடிக்கான மருந்து அங்கு மட்டுமல்லாமல்  தமிழகம் முழுவதும் போதுமான அளவில் ஸ்டாக் இல்லை என்பது தான் உண்மை. பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் அனைவரும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்திருக்கும் கிராமத்திலேயே தங்கி 24 மணி நேரமும் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். மருத்துவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய அரசு நிர்வாகமே கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு நிகழ்வுகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை மக்கள் முன் பலிகடாவாக ஆக்கி தங்கள் தவறுகளை மறைக்க முயல்கிறது. மேற்கூறிய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும்  பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பணி பாதுகாப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

மாறாக அரசு பணியாளர்களை காட்டிக் கொடுப்பது என்ற நிலை தொடருமாயின் அது அரசுக்கே விபரீதமாய் முடியும். இந்த உண்மைகளை மருத்துவத்துறை அமைச்சர்  உடனடியாக விசாரித்தறிந்து பணி மாற்ற உத்தரவுகளை உடனடியாக கைவிட வேண்டும். அரசு மருத்துவ அலுவலர் மற்றும் ஊழியர்கள் அரசாங்கத்தின் ஒரு முக்கிய அங்கம் என்பதனையும், அவர்களை மூத்த அமைச்சர் கண்ணியம் குறைவாக நடத்துவது மொத்த அரசு பணியாளர்களையுமே நிலைகுலையச் செய்து ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும்  பாதிக்கச் செய்து விடும்" என்று குறிப்பிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in