நடந்தது விபத்தல்ல, கொலை; நாடகமாடிய அரசு டாக்டர் சிக்கினார்: காட்டிக் கொடுத்தது சிசிடிவி கேமரா

நடந்தது விபத்தல்ல, கொலை; நாடகமாடிய அரசு டாக்டர் சிக்கினார்: காட்டிக் கொடுத்தது சிசிடிவி கேமரா

ராஜீவ்காந்தி மருத்துவமனை வளாகத்தில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டி மீது காரை மோதி விட்டு பேருந்திலிருந்து விழுந்து விபத்து நடந்ததாக கூறி நாடகமாடிய அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் லூசியா (75). இவர் அடிக்கடி வீட்டில் இருந்து சொல்லாமல், கொள்ளாமல் வெளியே வந்துவிடுவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 8-ம் தேதி இரவு 11.30 மணியளவில் மூதாட்டி லூசியா விபத்தில் படுகாயமடைந்ததாக கூறி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து ராஜீவ்காந்தி மருத்துவமனை காவல்துறையினர் இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் மூதாட்டி லூசியா பல்லாவரத்தில் பேருந்திலிருந்து இறங்கும் போது தவறி கீழே விழுந்து படுகாயமடைந்ததாக மூதாட்டி தெரிவித்ததாக கூறியுள்ளனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி லூசியா 8-ம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உடனே ராஜீவ்காந்தி மருத்துவமனை போலீஸார் இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் குரோம்பேட்டை போக்குவரத்து போலீஸார் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது அது போன்று எந்த விபத்தும் நடைபெறவில்லை என தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த குரோம்பேட்டை போக்குவரத்து போலீஸார் உடனே மருத்துவமனைக்கு சென்று சம்மந்தப்பட்ட ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதில் கடந்த 8-ம் தேதி இரவு மூதாட்டி ராஜீவ்காந்தி மருத்துவமனை வளாகத்தில் டவர் 3 பகுதியில் உள்ள மருத்துவர்கள் கார் பார்க்கிங் பகுதியில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் பிரபாகரன், கார் பார்க்கிங்கில் இருந்து தனது காரை முன்நோக்கி எடுக்கும் போது மூதாட்டி படுத்திருந்ததை கவனிக்காமல் அவர் மீது மோதியது பதிவாகி இருந்தது. மேலும் காயமடைந்த மூதாட்டியை மருத்துவமனை ஊழியர்கள் உதவியுடன் தூக்கி சென்று சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதனையடுத்து ராஜீவ்காந்தி மருத்துவமனை போலீஸார், மருத்துவர் பிரபாகரன் மீது வேகமாக ஓட்டுதல், கொலையாகாத மரணம் விளைவித்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மூதாட்டி மீது காரை மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு பேருந்தில் இருந்து தவறி விழுந்ததாக நாடகமாடிய மருத்துவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மருத்துவர் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டார். பின்னர் மருத்துவர் பிரபாகரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் நோயாளிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in