புதிய வகை கரோனா: அனைத்து அரசு அலுவலர்களும் இன்று முதல் கட்டாயம் மாஸ்க் அணிய தமிழக அரசு அதிரடி உத்தரவு

புதிய வகை கரோனா: அனைத்து அரசு அலுவலர்களும் இன்று முதல் கட்டாயம்  மாஸ்க் அணிய தமிழக அரசு அதிரடி உத்தரவு

கரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழகத்தில் அனைத்து அலுவலர்களுக்கும் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மருத்துவத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், 24 மணி நேரத்தில் 1,063 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 497 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 190 பேருக்கும், கோவையில் 50 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 174 ஆக அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை என கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் வேலூர், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் முகக் கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுத்துறை அரசு துணைச் செயலாளர் எஸ்.அனு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகத்தில் புதிய வகை கோவிட் 19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் இதன் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாலும், நோய்த் தொற்றின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியம் என்பதாலும், அனைத்து அலுவலர்களும் ஜூன் 24 (இன்று) முதல் கட்டாயமாக முக்ககவசம் அணிந்து அலுவலகத்திற்கு வருமாறும் சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in