நடிகரும், பாஜக எம்பி-யுமான ரவி கிஷன் துபே தனது கணவர் என கூறி வருகிறார் ஒரு பெண். அவர் மீது துபேயின் சட்டபூர்வ மனைவி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
பிரபல போஜ்புரி நடிகர் ரவி கிஷன் துபே. இவர் உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் எம்பி-யாக உள்ளார். இந்நிலையில், அபர்ணா சோனி என்ற பெண், ரவி கிஷனை தனது கணவர் என்றும், தங்களுக்கு ஷயோனா என்று ஒரு மகள் உள்ளதாகவும் திடீரென பரபரப்பு குற்றச்சாட்டை கிளப்பியுள்ளார்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஷயோனா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “நான் உங்கள் எம்பி-யான ரவி கிஷனின் மகள். எனக்கும் அம்மாவுக்கும் கொஞ்சம் அவகாசம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நான் கூறும் விஷயத்தை ஆதாரத்துடன் சொல்ல விரும்புகிறேன். அதன் பிறகு, உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, அந்த நீதியை வழங்குங்கள்" எனக் கூறியுள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு ஷயோனா கூறுகையில், “ரவி கிஷன் துபே தங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார். அவர் எனது தாய்வழி உறவினர் என முதலில் நினைத்திருந்தேன். எனக்கு 15 வயது ஆன போது அவர் தான் எனது தந்தை என எனது தாய் தெரிவித்தார்” என்றார்.
இதேபோல், அபர்ணா சோனி சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், தனது மகளின் உரிமைகளுக்காக போராடுவதாகவும், இதற்காக நீதிமன்றம் செல்லவும் தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார். அவர் (ரவி கிஷன்) என் மகளை தத்தெடுக்க வேண்டும் அல்லது அவளுக்கு சட்டபூர்வ உரிமைகளை வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், ரவி கிஷனின் சட்டபூர்வ மனைவி ப்ரீத்தி இந்த விவகாரம் தொடர்பாக கூறுகையில், “அபர்ணா சோனி என்ற பெண், எனது குடும்பத்தை பிளாக்மெயில் செய்து வருகிறார். இது தொடர்பாக மும்பை போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.
பாஜக எம்பி-யான ரவி கிஷன் குடும்பத்தின் இந்த விவகாரம் உத்தரப் பிரதேசத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை... விருதுநகரில் பரபரப்பு!
குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு திரவுபதி உதாரணம்: சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!
ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்... இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்த யுவன் ஷங்கர் ராஜா?!