
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்.3) உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோயில் அருகே, காவலர்களை அரிவாளால் தாக்கிய ஐஐடி பட்டதாரி அகமது முர்தஸா அப்பாஸி, தனது செயலுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் பேசும் காணொலி தற்போது வெளியாகியிருக்கிறது.
ஒரு நிமிடம் 49 வினாடிகள் ஓடும் அந்தக் காணொலியில், இரண்டு அல்லது மூன்று பேருடன் அவர் பேசுவதாகப் பதிவாகியிருக்கிறது. அவர்கள் அந்தக் காணொலியில் காட்டப்படவில்லை.
கோரக்நாத் கோயில் அருகே உள்ள கடைக்காரர்களையும், காவலர்களையும் அகமது முர்தஸா அப்பாஸி அரிவாளால் கண்மூடித்தனமாகத் தாக்கினார். மிகவும் சிரமப்பட்டு அவரை மடக்கிப் பிடித்த போலீஸார் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் இந்தக் காணொலி பதிவுசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
அந்தக் காணொலியில், தனது செயலுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் பேசியிருக்கும் அகமது முர்தஸா அப்பாஸி குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்ஆர்சி விஷயத்திலும், ஹிஜாப் விவகாரம் தொடர்பாகவும் பாஜக அரசை விமர்சிக்கிறார். இந்தப் பிரச்சினைகள் தன்னைக் கடுமையாகப் பாதித்ததாகவும் விரக்தியடையச் செய்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
2015-ல் மும்பை ஐஐடியில் படிப்பை முடித்த அப்பாஸி, இந்த வன்முறைச் செயலில் ஈடுபட்டதன் பின்னணி குறித்து உத்தர பிரதேச அரசு தீவிர விசாரணை நடத்திவருகிறது. பயங்கரவாதத் தாக்குதல் எனும் கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. அப்பாஸியின் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது.
இதற்கிடையே, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பயங்கரவாத கோணத்தில் விசாரணை நடத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். அப்பாஸியின் மனநலம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
“அப்பாஸிக்கு உளவியல் பிரச்சினை இருப்பதாக அவரது தந்தை தெரிவித்திருக்கிறார். பாஜக இதுபோன்ற விஷயங்களை மிகைப்படுத்துகின்ற கட்சி” என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்த கருத்துகள் பாஜகவினரைக் கடும் கோபத்தில் ஆழ்த்திருக்கின்றன. ‘உளவியல் பிரச்சினை கொண்ட பயங்கரவாதிகளின் பட்டியலை அகிலேஷ் வெளியிட்டால், அவர்களுக்கு முதல்வர் ‘உரிய சிகிச்சை’ அளிக்க வசதியாக இருக்கும்’ என்று உத்தர பிரதேச பாஜக தலைவரும் அமைச்சருமான ஸ்வதந்திர தேவ் சிங் ட்வீட் செய்திருக்கிறார்.
அகிலேஷின் கருத்து மலினமானது; துரதிருஷ்டவசமானது என்று துணை முதல்வர் கேசவ் மவுரியா விமர்சித்திருக்கிறார்.