கொலை, பாலியல் வழக்கில் சிக்கிய 5 பேர் மீது குண்டாஸ்: தூத்துக்குடி எஸ்பி அதிரடி

கொலை, பாலியல் வழக்கில் சிக்கிய 5 பேர் மீது குண்டாஸ்: தூத்துக்குடி எஸ்பி அதிரடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, போக்சோ மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 25.12.2022 அன்று தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் வைத்து அதே பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் ராம்குமார் (44) மற்றும் அவரது மனைவி மாரியம்மாள் (39) ஆகியோரை குடும்ப பிரச்சினை காரணமாக கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த கருப்பசாமி மகன் முருகேசன் (47) மற்றும் இவரது மகன் மகேஷ் (19) ஆகியோரை தென்பாகம் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் முருகேசன் மற்றும் மகேஷ் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜராம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனுக்கு பரிந்துரை செய்தார்.

இதேபோல், கடந்த 30.11.2022 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி பாரதி நகர் பூங்கா அருகில் வைத்து தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த சங்கரன் மகன் பெரியநாயகம் (60) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த நல்லக்கண்ணு மகன் பழனிக்குமார் (39), தூத்துக்குடி முனியசாமிபுரத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் ஆனந்தராஜ் (எ) ஆனந்த் (28) மற்றும் சிலரை சிப்காட் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கில் பழனிக்குமாரை கடந்த 28.12.2022 அன்று கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட நிலையில், மற்றொரு குற்றவாளியான ஆனந்தராஜ் (எ) ஆனந்த் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகமும் பரிந்துரை செய்தார்.

மேலும், கடந்த 18.12.2022 அன்று ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் ஆழ்வார்திருநகரி அண்ணாநகரை சேர்ந்த பால்ராஜ் மகன் முனியாண்டி (42) என்பவரை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கின் எதிரியான முனியாண்டி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லெட்சுமி பிரபாவும் பரிந்துரை செய்தார்.

கடந்த 29.12.2022 அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாடு- கலியாவூர் பகுதியில் ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் முறப்பநாடு கலியாவூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் முத்துகல்யாணி (21) என்பவரை முறப்பநாடு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரியான முத்துகல்யாணி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ஜமாலும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த மகேஷ், தூத்துக்குடி முனியசாமிபுரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (எ) ஆனந்த், ஆழ்வார்திருநகரி அண்ணாநகரை சேர்ந்த முனியாண்டி மற்றும் முறப்பநாடு கலியாவூர் பகுதியை சேர்ந்த முத்துகல்யாணி ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் 5 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in