மாணவி சத்யா கொலை வழக்கு: கைதான சதீஷ் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

மாணவி சத்யா கொலை வழக்கு: கைதான சதீஷ் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

சென்னை மாணவி சத்யா ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13-ம் தேதி தனியார் கல்லூரி மாணவி சத்யா ரயில் முன் தள்ளி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கு தொடர்பாக சதீஷ் என்ற வாலிபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சத்யா கொலை வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி டி.ஜி.பி சைலேந்திர பாபு கடந்த 14-ம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி செல்வகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி காவல் ஆய்வாளர் ரம்யா நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாணவி சத்யா கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் கொலையாளி சதீஷை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில், ஒரு நாள் மட்டுமே காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சதீஷிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சதீஷ் மீது, குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீஸாரின் பரிந்துரையில் சென்னை மாநகர காவல் ஆணையர் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in